2021ஆம் ஆண்டுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு

மருத்துவத்திற்கான நோபல் பரிசானது இவ் ஆண்டில் இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று (04) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.