உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: IGP பூஜித், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிக்கு குற்றப்பத்திரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: IGP பூஜித், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறிக்கு குற்றப்பத்திரம்-Trail-at-Bar Serves Charges on Pujith Jayasundara & Hemasiri Fernando

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் எடுத்தக்கொள்ளப்பட்ட போது, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர மீது சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷதீன் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், கடந்த 2021 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் அலட்சியம் மற்றும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 864 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் 2 தனித்தனி வழக்குகள் சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திலிருந்து ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1,215 பேரின் பெயர்களை சாட்சிகளாக சமர்ப்பித்தார்.

அதற்கமைய, குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.