கொரோனா முடக்க காலத்தில் சிறுவர்களை மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்

கொரோனா முடக்க காலத்தில் சிறுவர்களை மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்-Children Should be Protected From Stress During COVID-19 Pandemic

- இன்று இலங்கையில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்

இன்றைய கொரோனா சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் பேசுபொருளாக மாறி இருப்பது சிறுவர்களின் பாதுகாப்பும் பராமரிப்புமாகும். கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் உலக நாடுகள் பலவற்றில் சர்வதேச சிறுவர் தினம் (ஒக்டோபர் 01) இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையில் 'அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்களே' எனும் தொனிப்பொருளில் இத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த ஒரு வசனத்தில் பல்வேறு அர்த்தபுஷ்டியான விடயங்கள் பொதிந்து காணப்படுகின்றன. சிறுவர்கள் ஏனையோரில் தங்கி வாழ்பவர்கள். இவர்கள் தங்களது பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களின் பராமரிப்பிலும் இருப்பவர்கள். எனவே இவர்களுக்கு அனைத்து வகையான விடயங்களிலும் பாரபட்சமின்றி சமஅந்தஸ்தும், உரிமையும் வழங்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகவுள்ளது.

இயற்கையாக பால் அடிப்படையில் ஆண், பெண் எனக் காணப்பட்டாலும் சிறுவர்கள் என்ற ரீதியில் அனைவரும் சமமானவர்களாகவே நோக்கப்பட வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக தொடரும் பாடசாலை விடுமுறைகள், பயணத் தடைகள், தனிமைப்படுத்தல்கள் என்பன காரணமாக எந்த வகையிலும் இவர்களுக்கு உடல், உள பாதிப்பு ஏற்படாமல் சமமாக நடத்துதல் வேண்டும்.

வீடுகளில் அனைவரும் முடங்கி இருக்கும் வேளையில் பிள்ளைகளை ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசி சிறார்களை மனஅழுத்தத்துக்கு உட்படுத்தலாகாது. சிட்டுக்குருவியாய் சிறகடித்தவர்களை கொரோனா வைரஸ் தொற்றானது வீடுகளுக்குள் முடக்கி விட்டது. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மேலும் பாதிக்கும் விதத்தில் பெரியவர்கள் நடந்து கொள்ளலாகாது. அனைத்து விடயங்களிலும் சிறுவர்களை கவனத்தில் கொள்வது அவசியம்.

ஏனெனில் சிறுவர்களது பார்வை பெரியோர்களைப் போலல்லாமல் வேறு விதமாகவே காணப்படும். கருத்துகளை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை சிறார்களுக்கு வழங்க வேண்டும். இதனையே சிறுவர் உரிமைகள் சமவாயம் வலியுறுத்துகின்றது. சகல விதத்திலும் கட்டுப்பாடுகளை விதிப்பதானது அவர்களது தனித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாய் அமையும். பெரியவர்கள் அவர்களோடு சிறந்த உறவைப் பேணுதல் வேண்டும்.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காலப் பகுதியில் இணையவழி கற்றல் நடைபெறுகிறது. இக்காலப் பகுதியில் இணையத்தை சிலவேளை தவறாக பயன்படுத்த சிறார்கள் எத்தனிக்கலாம். எனவே நல்ல முறையில் அவர்களுடன் உறவைப் பேணும் போது சிறந்த வழிகாட்டலை எம்மால் வழங்க முடிவதோடு, தீயவழியில் இருந்து அவர்களை மீட்கவும் முடியும்.

சிறுவர்களுக்கு நட்புறவான சூழலை ஏற்படுத்தி அவர்களது ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரதும் பொறுப்பாகும். வீடுகளில் முடங்கி இருக்கும் தருணங்களில் ஆடல், பாடல், சித்திரம், நடனம், குறுநாடகம் போன்ற துறைகளில் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் 'மனதில் உள்ளதை வரையுங்கள்' எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியது.

இதைத் தவிர நாடகம் மற்றும் குறுநாடகம் போன்ற நிகழ்வுகளையும் முன்னெடுத்து நடத்துகிறது. 'பட்டினி அற்ற நாளைய தேசத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் சிறுவர்களை முன்னுரிமைப்படுத்தி நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பலாமரக்கன்றுகளை சர்வதேச சிறுவர் தினத்தை அனுஷ்டிக்கும் இன்றைய தினமே நடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர்கள் என்பவர்கள் சுதந்திர வானில் பறக்கும் பட்டங்கள் போன்றவர்கள். எவ்வளவு உயரப் பறந்தாலும் அதன் நூல் பெற்றோர், பாதுகாவலர்களின் கையில் இருக்க வேண்டும்.

ஏ.எஸ்.எம். கஸ்பியா வீவி (BA)
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்
கல்முனை பிரதேச செயலகம்