துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 5 கோடி அமெரிக்க டொலர்

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 5 கோடி அமெரிக்க டொலர்-Central Bank Releases USD 50 Million to Release of Essential Goods that are Held at the Colombo Harbour

கொழும்பு துறைமுகத்தில் கிடப்பில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு 50 மில்லியன் (5 கோடி) அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

குறித்த அத்தியாவசிய பொருட்களை விடுப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள, 2 அரசாங்க வங்கிகளுக்கு இவ்வாறு குறித்த நிதியை விடுவித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு அவை விடுவிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் குறித்த நிதி இறக்குமதியாளர்களிடமிருந்து கட்டம் கட்டமாக அறவிடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க மேலும் நிதி தேவைப்படுமாயின், அதனையும் வழங்க இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு சம்பவங்களுடன் தொடர்புடைய துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் சுங்கத் திணைக்களம் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை நாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.