சீன சேதன பசளை மாதிரிகளில் ஆபத்தான பக்டீரியாக்கள்; இறக்குமதி இடைநிறுத்தம்

சீன சேதன பசளை மாதிரிகளில் ஆபத்தான பக்டீரியாக்கள்; இறக்குமதி இடைநிறுத்தம்-Importing Organic Fertilizer From Chinese Company Suspended

சீன நிறுவனத்தால் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட சேதனப் பசளை மாதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா (Erwinia) கண்டுபிடிக்கப்பட்டமை காரணமாக அதன் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அற்கமைய, சீனாவிலிருந்து குறித்த சேதனப் பசளையை இறக்குமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளையை இந்நாட்டுக்கு கொண்டுவரும் விலைமனு கோரலைப் பெற்ற சீன நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட பசளை மாதிரி, விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அர்வீனியா (Erwinia) எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.

கிழங்கு, வெங்காயம், கரட் போன்ற மரக்கறிகளின் விளைச்சலை பாதிக்கச் செய்யும் தன்மை இந்த பக்டீரியாவுக்கு உள்ளது.

அத்தகைய பாதிப்புக்குரிய பக்டீரியா வகை, இந்த பசளை மாதிரியில் இல்லை என தர நிர்ணய சபை பெயரிட்ட சுயாதீன பரிசோதனைக்கூடம் நடத்திய பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த சீன நிறுவனத்தின் மாதிரியில் மேற்கொண்ட சோதனையில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, விவசாண திணைக்களம் அதனை எவ்வகையிலும் இறக்குமதி செய்யப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் சட்டத்திற்கமைய, இவ்வாறான பக்டீரியா அடங்கிய பொருட்கள் மாதிரியாகவேனும் கொண்டுவர முடியாது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் பாசிகளால் தயாரிக்கப்பட்ட சேதனப் பசளையே Qingdao Seawin Biotech Group Co., Ltd. எனும் சீன நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

20 வருட கால அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் கடல் பாசியை பயன்படுத்திய சமுத்திரவியல் உர தயாரிப்பில் தாம் முன்னிலை அடைந்துள்ளதாக சீவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவின் க்வின்டாவோ துறைமுக நகரத்தை அண்மித்து சுமார் 1700 சதுர கிலோமீட்டரில் பாதிப்புக்குரிய அல்காக்கள் வளர்ந்துள்ளதாக கடந்த ஜூன் மாதம் ரொய்ட்டர் செய்தி சேவை உறுதிப்படுத்தியிருந்தது.

15 வருட காலமாக இந்தப் பகுதியில் அல்காக்கள் பிரச்சினை நிலவியதாகவும் அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாவரங்களை அப்புறப்படுத்துவதற்காக சுமார் 12,000 படகுகள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.