பளையில் மாற்றுத் திறனாளியின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக நாசம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் காய்த்துள்ள நிலையில் இன்று முதல் காய்களை அறுவடை செய்யத் தயாரான நிலையில் விசமிகளால் அனைத்து மிளகாய்ச் செடிகளும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தினால் வறுமைக்குள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குறித்த குடும்பம் பெரிதும் மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றது.

தங்களுக்குத் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. என்றும் ஆனால் எவராலும் இவ்விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவிக்கும் குறித்த குடும்பம், இது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி குறூப் நிருபர்