நளீம் ஹாஜியார்; தேசத்தை உண்மையாக நேசித்த முன்னுதாரண புருஷர்

மர்ஹும் நளீம் ஹாஜியாரின் 16 வது நினைவு தினம் (2021.09.26) நாளை. அதன் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கை மண் ஈன்றெடுத்த தேச நலனுக்காக உழைத்த உன்னத ஆளுமைகளில் ஒருவரே மர்ஹூம் நளீம் ஹாஜியார். இரத்தினக்கல் அரசன் (Gem King)என வர்ணிக்கப்படும் அளவு உலகப் பிரசித்தி பெற்ற நளீம் ஹாஜியார் இனம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து மாணிக்க வர்த்தகத்தில் நம்பிக்கை, வாய்மை, நேர்மை போன்ற உயரிய வர்த்தக விழுமியங்களுடன் செயலாற்றினார்.

இலங்கைக்குள் மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து மாணிக்கக்கல் வியாபாரிகள் மிகவும் மதிப்பு வாய்ந்த இரத்தினக் கற்களைக் கொள்வனவு செய்வதற்காக அன்னாரை நாடி வருவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு தனி மனிதனாக நின்று இலங்கை தேசத்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி, தேசத்துக்கான தனது தனித்துவமான பங்களிப்பை மேற்கொண்டார்.

இத்தகைய வர்த்தக செயற்பாடுகளுக்கூடாக இலங்கையின் சர்வதேச வியாபாரத்துக்குப் பங்களிப்பு செய்ததோடு அந்நியச் செலாவணியை இலங்கை தேசத்துக்கு ஈட்டிக் கொடுப்பதற்கும் பாரிய பங்களிப்புகளை நல்கினார். எமது நாட்டின் மாணிக்கக்கல் வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த அவர், அதிக வருமானம் ஈட்டித் தரும் துறையாக அத்துறை மாறுவதற்கு அவசியமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கினார். இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபன உருவாக்கம் தொடர்பில் அன்றைய நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம். பெரேரா நளீம் ஹாஜியாருடன் கலந்துரையாடி அவரிடமிருந்து காத்திரமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார். இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தின் தோற்றத்துக்குப் பங்களிப்பு செய்தமைக்காக, இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவிற்கு நளீம் ஹாஜியார் விஷேட அதிதியாக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணிக்க வர்த்தகர்களுக்கிடையில் வலுவான உறவைக் கட்டியெழுப்பி அவர்களுக்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார். பல்கலைக்கழகங்களில் மாணிக்க வர்த்தகம் தொடர்பில் தனது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார்.

சம்பாதித்த செல்வத்தை தேசத்தின் பல்வேறு நலன்களுக்காக செலவளித்த பெரும்கொடை வள்ளல் அவர். 1970களில் இலங்கை அரசு எதிர்கொண்ட பாரிய வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசுக்கு நளீம் ஹாஜியார் ஒத்துழைத்தமை தேசநலனில் அவருக்கிருந்த பலமான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் சிறந்த சான்றாகும். 1974இல் இலங்கை மிகப் பாரதூரமான வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியது. இந்நிலையில் எமது தாய்நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கத்துக்கு சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான தனது வெளிநாட்டு செலாவணியை அன்பளிப்புச் செய்தார்.

கல்வி மேம்பாட்டுக்காக நளீம் ஹாஜியார் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். துறைசார் நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிப் பரம்பரை ஒன்றைத் தோற்றுவித்து, இந்நாட்டுக்கு பங்களிப்பு செய்யும் நோக்கோடு 1973இல் ஜாமிஆ நளீமியா உயர் கலாபீடத்தையும், 1990இல் இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியையும் நிறுவினார்.

"இந்தக் கலா நிலையத்தில் நடைபெறும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. இதனை நிறுவியதன் மூலம் நளீம் ஹாஜியார், நாட்டிற்கும் குறிப்பாக இஸ்லாமிய கல்வித்துறைக்கும் மிகச்சிறந்த பணி புரிந்துள்ளார்" என்பதாக பேராசிரியர் டீ.ஈ ஹெட்டியாரச்சி, 1984இல் ஜாமிஆ நளீமியா உயர் கலாபீடத்தின் பணிகளைப் பாராட்டி இருந்தார். இலங்கை முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி நிஸ்ஸங்க விஜயரத்ன 1978இல் நளீமிய்யாவைத் தரிசித்ததுடன், "இந்நிறுவனத்தில் காணப்படும் கற்பதற்கான சிறந்த வசதி வாய்ப்புக்களும் அதன் பாடத்திட்டமும் ஓர் உயர்ந்த கலா நிலையமொன்றின் தரத்திற்கு அதனை உயர்த்தி உள்ளன. நான் இந்தக் கலாநிலையத்தால் மிகவும் கவரப்பட்டுள்ளேன்" என ஜாமிஆ நளீமிய்யாவை சிலாகித்துப் பேசினார்.

"ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தை உருவாக்கி நளீம் ஹாஜியார் ஆற்றிய பணி சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்" என இலங்கை முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, ஜாமிஆ நளீமிய்யாவின் 10ஆவது பட்டமளிப்பு விழாவின் போது நளீம் ஹாஜியாரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியினால் தொகுக்கப்பட்ட'இலங்கை முஸ்லிம்கள்-பூர்வீகப் பாரம்பரியத்திற்கான பாதைகள்' (Muslims of Sri Lanka -Avenues to Antiquity)எனும் வரலாற்று நூல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் வெளியிடப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வுக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நூல் பற்றிய ஆய்வுரையை இலங்கை வரலாற்றுத் துறை அறிஞர்களில் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா நிகழ்த்தினார். நூலின் முதல் பிரதி நளீம் ஹாஜியாரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நளீம் ஹாஜியார் தன்னிடம் உதவி கேட்டு வரும் அனைவருக்கும் இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து மனித நேயத்துடன் உதவி செய்து மகிழ்ந்தார். தனது செல்வத்தின் பெரும் பகுதியை அதற்காக செலவளித்தார். தேசத்தில் இன, மத நல்லுறவைப் பேணுவதிலும் அதனைப் போஷிப்பதிலும் நளீம் ஹாஜியாரின் பங்களிப்புகள் காத்திரமானவை. தனது மாணிக்க வியாபாரத்தில் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்களை முஸ்லிமல்லாத சகோதர மதத்தவர்களுடனேயே அவர் மேற்கொண்டார். அனைத்து இன, மதத்தவர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நாட்டில் சமாதான சகவாழ்வை நிலைக்கச் செய்வதில் நளீம் ஹாஜியார் கூடுதல் கரிசனை காட்டினார். தனது பிரதேசத்திலும் தேசிய மட்டத்திலும் பல மத ஸ்தலங்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார்.

நாட்டின் வர்த்தகத் துறை, கல்வித் துறை, சமூக நலன்கள் என பல பகுதிகளுக்கு பங்களிப்புகளை வழங்கிய நளீம் ஹாஜியார் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் தனது செல்வத்தின் மூலம் உதவிகளை வழங்கினார். நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை நிர்மாணித்துக் கொடுத்ததோடு, அவசியமான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார். தேசிய மட்டத்திலான விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கிய அவர், இலங்கையில் புகழ்பெற்ற விளையாட்டரங்கமான சுகததாச உள்ளக விளையாட்டரங்க நிர்மாணப் பணிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வழங்கினார். அதேபோன்று எஸ்.எஸ்.ஸி விளையாட்டரங்கின் அபிவிருத்திக்காக பண உதவிகள் செய்ததோடு, 'பைரஹா பெவிலியன்' என்ற பெயரில் அங்கு பார்வையாளர் கூடமொன்றையும் கட்டிக் கொடுத்தார்.

தேசிய மட்டத்தில் செய்த பொது நலப் பணிகளில் இலங்கை தேசத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு பணியாக, 'சுசரித்த' கட்டட அன்பளிப்பைக் குறிப்பிடலாம். அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளூராட்சி அமைச்சராக இருந்த காலத்தில் அதன் பிரதான கட்டடமான 'சுசரித்த' கட்டடத்தைப் புதிதாக நிர்மாணித்துக் கொடுத்தார். இவ்வாறு நளீம் ஹாஜியார் தனது தேசத்திற்காகச் செய்த பொதுப் பணிகளின் வீச்செல்லை மிகவும் விசாலமானது.

பணிவும் பொதுநலனும் ஒருசேரப் பெற்றவராக நளீம் ஹாஜியார் வாழ்ந்தார். தான் சம்பாதித்த செல்வத்தால் காத்திரமான பணிகளை மேற்கொண்டு தேசத்தின் நலன் ஓங்குவதற்கு உழைத்த ஓர் உன்னத ஆளுமையான நளீம் ஹாஜியார் எமது தேசத்தின் நற்பிரஜைகளுக்கான மிகச் சிறந்த முன்மாதிரி என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகையதொரு முன்மாதிரி நற்பிரஜையைப் பெற்றதற்காக நாடும் சமூகமும் பெருமிதமடைகின்றன.

நளீம் ஹாஜியார்
ஞாபகார்த்த பேருரை மன்றம்