மனித உள்ளங்களில் சமாதானம் ஏற்பட்டால் மாத்திரமே உலகெங்கும் அமைதி தோன்றும்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி அனைத்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் அஹிம்சை மற்றும் சமாதானத்தை நிலைநாட்டி தீவிரவாதம், போர் போன்ற தவறான செயல்களில் இருந்து விடுபட்டு, நாடுகளில் அமைதி நிலவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினத்தை கடைப்பிடிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருந்தாலும், சமூகநீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாகக் கூற முடியாது என்று காந்தியடிகள் கூறியிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்க வேண்டியதும் அவசியம்.

உலக அமைதி (world peace) அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும்.

உலக அமைதி பற்றிச் சமயங்களின் பார்வையை நோக்கும் போது பொதுவாக அனைத்து சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்துகின்றன. உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும் போது உலக அமைதி ஏற்படும். உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகாயுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பலி கொண்டுள்ளன. 2 ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலக சமாதானத்திற்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 இல் இடம்பெற்ற வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்தது செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை ஆகும்.

யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் ‘மனித உள்ளங்களில் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்’ என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் "படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால்தான் அதனைப் பெற முடியும்" என்றார்.

இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம்,விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள் மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதிலாக, பகைமை உணர்வுடன் செயற்படுகின்றன.

உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அனைத்து நாடுகளும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால் பிரச்சினையும் தீராது பொருளாதாரமும் வீழ்ச்சி அடையும்.

மனிதனின் உள்ளத்தில் அமைதி சமாதானம் ஏற்பட்டால்தான் குடும்பத்திலும் சமூகத்திலும் பிராந்தியத்திலும் மாத்திரமல்லாமல் முழு உலகிலுமே அமைதி ஏற்படும். அதன் காரணத்தினால் மனித உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய தேவை பரவலாக காணப்படுகிறது.

உலகில் எல்லா மக்களுமே அமைதியையும் சமாதானத்தையும் கடைப்பிடித்து அனைத்து மக்களும் சுபீட்சமான வாழ்வை வாழ்வதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி கொள்ளவேண்டும். உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே உலக அமைதியை நிலை நாட்ட முடியும். அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைத்து உகல நாடுகளின் அரசியல் தலைவர்களும் மக்களும் பாடுபட முன்வர வேண்டும்.

அஷ்ரப்கான்
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)