ஆட்ட நிர்ணயக் குற்றசாட்டுக்கு அடிப்படை இல்லையென முடிவு

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் மோசடி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டு அமைச்சரான மஹிந்தானந்த அலுத்கமகே கூறிய கருத்து அடிப்படை அற்றது என சட்டமா அதிபர் உறுதி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு குற்றங்களை கண்டறியும் சிறப்பு பொலிஸ் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.

சர்வதேச அவதானத்தை பெற்ற முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் இந்தக் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தும்படி அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து டலஸ் அலகப்பெரும, விளையாட்டு குற்றங்களை கண்டறியும் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி செயற்பட்ட அந்தப் பிரிவு 2011 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை வகித்த குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, உபுல் தரங்க உட்பட வீரர்கள் மற்றும் அப்போது தேசிய தெரிவுக் குழு தலைவரான அரவிந்த டி சில்வாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரவிந்த டி சில்வாவிடம் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை காலப்பகுதியில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு மஹேல ஜயவர்தனவை மீண்டும் விசாரிப்பதற்கு அழைத்திருந்த நிலையில் திடீரென்று அந்த விசாரணை இடைநிறுத்தப்பட்டது. இதுவரை இடம்பெற்ற விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்று சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரின் கருத்து அடிப்படையற்றது என்பதாலும் இந்த நிகழ்வு கடந்த காலத்தில் தாக்கம் செலுத்திய ஒன்று என்பதாலும் விசாரணையை முன்னெடுப்பதற்கான தேவை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தபோதும் இந்த மோசடி தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.