CID யில் 3 1⁄2 மணி நேர வாக்குமூலத்தின் பின் வெளியேறினார் சம்பிக்க ரணவக

CID யில் 3 1⁄2 மணி நேர வாக்குமூலத்தின் பின் வெளியேறினார் சம்பிக்க ரணவக-Patali Champika Ranawaka Left CID After 3 & Half Hour Long Statement

- அரசாங்கம் மக்களின் கவனத்தை திருப்ப முயற்சி என எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஐக்கிய மக்கள் சக்தி கடசி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் மூன்றரை மணி நேர வாக்குமூலம் அளித்த பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று மு.ப. 9.00 மணியளவில் இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் அங்கு முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பிக்க ரணவக கடந்த அரசாங்க காலத்தில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளையில், முன்னெடுக்கப்பட்ட 'யகட மினிசா' (இரும்பு மனிதர்) எனும் திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, பாட்டலி சம்பிக்க ரணவகவின் தனிப்பட்ட ஊழியர்களாக பணிபுரிந்த பல அதிகாரிகளிடம் இருந்து சிஐடி வாக்குமூலம் பெற்றது.

இதேவேளை, இன்று (24) CID இற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு ஆதராவாக, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எம்.பிக்களான கபீர் ஹஷீம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மனுஷ நாணயக்கார, கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர், திணைக்களத்திற்கு முன்பாக ஆஜராகியிருந்ததோடு, தற்போது மக்கள் அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை வேறுபக்கத்திற்கு திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக விசனம் தெரிவித்தனர்.