இன்று அலரிமாளிகையில் பங்காளி கட்சிகளுடன் பிரதமர் விசேட கூட்டம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற உள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மேற்படி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதுடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் அதன் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் தலைவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். பங்காளிக் கட்சித் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். மேற்படி கட்சிகளின் தலைவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கூடி அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் எவ்வாறாயினும் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதென தீர்மானித்திருந்தனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்