வன்னி எம்பி மஸ்தானின் இணைப்பாளர் தொற்றால் மரணம்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியாவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (21.09) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர், பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளி வாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும் ஆவார்.

குறித்த நபரின் சடலம் அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்தனர்.

வவுனியா விசேட நிருபர்