யாழ் மண்ணிலிருந்து வந்து மலையக மாணவருக்காக பெரும் பணியாற்றிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ரிச்வே

39 வருட அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு

ஹற்றன் கல்வி வலயத்தின் சித்திர பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெ.ஒ.எல்.ரிச்வே தனது 39 வருட அரசாங்க சேவையிலிருந்து 19.09.2021 இல் ஒய்வு பெற்றுள்ளார். சித்திரப் பயிற்சி ஆசிரியராக 01.06.1991 அன்று ஆசிரிய சேவையில் இணைந்த இவர், மாகாண மட்டத்தில் ஹற்றன் கல்வி வலயம் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புகளில் சித்திர பாடத்தில் 100 வீத பெறுபேற்றை பெற்றுக் கொடுக்க காரண கர்த்தாவாக இருந்தார்.

சுமார் 60 சித்திரப் பயிற்சி மற்றும் சித்திர டிப்ளோமா ஆசிரியர்களையும் 7 இற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களையும் இவ்வலயத்தினுள் அவர் உருவாக்கியுள்ளார். 20.09.1961 யாழ் மண்ணில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார்.

அத்துடன் கணக்கியல் துறையில் லண்டன் கணக்கு பதிவியலாளர் பரீட்சையில் சித்தியும் பெற்றிருந்தார். 1981இல் நடைபெற்ற அரச ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று 21.04.1982 இல் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் சித்திர பாட ஆசிரியராக முதன் முதல் கடமையை ஏற்றார். அத்துடன் கணக்கியல் துறையில் கற்பித்து குறுகிய காலத்தில் மாணவர்கள் பல்கலைகழகம் செல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

1991 இல் இடம்பெயர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் திம்புள வித்தியாலயத்தில் தனது சேவையை ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் இவரது கற்பித்தல் திறனை அவதானித்த அன்றைய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெ.எஸ்.ஜெ.ஜோசப் 01.01.1992 தொடக்கம் ஹற்றன் புனித பொஸ்கோ கல்லூரிக்கு இடமாற்றம் வழங்கினார்.

அங்கிருந்து வாரத்தின் மூன்று நாட்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் கொத்மலை வலப்பனை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் தம் கற்பித்தல் பணியை செயற்படுத்தினார். தொடர்ந்து 15.10.1993 சித்திர பாட ஆசிரிய ஆலோசகராகவும், 10.03.2003 தொடக்கம் சித்திர பாட உதவிக் கல்வி பணிப்பாளராகவும் நியமனம் பெற்று பணியாற்றினார்.

பத்தனை சிறிபாத கல்வியற் கல்லூரி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை, தலவாக்கலை தொலைக்கல்வி நிலையம் என்பவற்றில் பகுதி நேர சித்திர பாட விரிவுரையாளராக பணியாற்றி பல ஆசிரியர்களை உருவாக்கினார். தேசிய ரீதியில் தேசிய கல்வி நிறுவனத்தில் இப்பாடத்திற்கான வளவாளராகவும், ஆசிரியர் கைநூல் எழுத்தாக்க உறுப்பினராகவும், கல்வி அமைச்சின் வளவாளராகவும், இலங்கை பரீட்சைத் திணைக்கள பிரதம பரீட்சகராகவும், திருகோணமலை- கம்பளை- கண்டி- கொழும்பு- நுவரெலியா- ஹற்றன் ஆகிய பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் ஆற்றினார்.

சித்திர பாடத்திற்காக ஹற்றன் பிரதேசத்தில் இரண்டு விடைத்தாள் திருத்தும் குழுக்களையும், அழகியல் பாட செய்முறை பரீட்சைக்காக மூன்று நிலையங்களையும் ஏற்படுத்தி இச்செயற்பாட்டில் மலையக ஆசிரியர்களையும் முழுமையாக ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். க.பொ.த உயர்தரத்தில் சித்திர பாடத்தை பல பாடசாலைகளில் அறிமுகம் செய்து பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தினார். சித்திர பாடத்தில் மட்டுமன்றி சங்கீதம், நடனம், நாடகம், கத்தோலிக்க சமயம் என்றெல்லாம் பல பாடங்களையும் பொறுப்பேற்று அவற்றிலும் மிகச் சிறந்த பெறுபேற்றுக்கு வித்திட்டார். கத்தோலிக்க ஆசிரியர்களின் ஆன்மீக செயற்பாட்டில் அதிக அக்கறையோடு செயற்பட்டு, பிரதேச பங்கு குருக்களின் உதவியுடன் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்.

கொரோனா இடர்நிலையில் ஆசிரியர்கள் நிகழ்நிலை கற்பித்தலில் ஈடுபடுவதற்கு வழிகாட்டியாக இருந்தார். கற்றல் சாதனங்களை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்கள் கற்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியதோடு பல கைநூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பல கற்றல் நூல்களை வெளியிட வைப்பதற்கு ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜெ.ஒ.எல்.ரிச்வே அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும், அர்ப்பணிப்பு மிக்க அந்த ஆசானது ஆலோசனையும் வழிகாட்டல்களும் என்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் துணை நிற்கும்.

இரா.யோகேசன்

(கினிகத்தேனை தினகரன் நிருபர்)