கிழக்கில் 95 வீதமான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 95 விகிதமானோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள்  பெரியளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் அவர்கள் தொடர்ந்தும் அவதானத்தோடு இருக்க வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபீக் செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எமது மாகாணத்திலுள்ள ஆசிரியர்களின் தொகை 225,703 ஆகும் அதில் 224,240 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவிட்டது. இன்னும் 1463 ஆசிரியர்களுக்கே தடுப்பூசி ஏற்ற வேண்டியிருக்கிறது.

இதற்கு அப்பால் தேசிய ரீதியில் கொரோனாவுக்கான ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது முன்பிருந்த, கொரோனா தொற்று, கொரோனா இறப்பு விகிதங்களை குறைத்துள்ளது. இவை எமது நடவடிக்கைகளுக்கான ஒரு சாதகமான மாற்றமாக எமக்கு தென்படுகிறது. கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க  நாட்டுமக்கள் அனைவரும் எமது அறிவுறுத்தல்களை பேணி நடக்க வேண்டும் என்பது எமது தயவான கோரிக்கையாகும்.

கல்வி அமைச்சு பாடசாலைகளை திறப்பதில் கரிசனையோடு கருமமாற்றிவருவதை அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத ஆசிரியர்கள் மிகவிரைவாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்