குற்றச்சாட்டுகளின்றி தடுப்பில் உள்ளோரை விடுவிக்க வேண்டும்

சர்வதேச மன்னிப்புச் சபை அரசிடம் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதுடன் அவர்களில் குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேசக் கட்டமைப்புக்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் கதையும் இரு நிமிட காணொளி வடிவில் பகிரப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமது அன்பிற்குரியவர்கள் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, பல குடும்பங்கள் பெரும் துன்பத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின்றித் தடுத்து வைப்பதற்காக அதிகாரத்தைப் பயங்கரவாதத் தடைச் சட்டம் வழங்குகிறது என்றும் அப்பதிவில் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.