செப். 21 ஐ.நா. 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்பார்

செப். 21 ஐ.நா. 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்பார்-President Will Attend 76th Session of UN General Assembly-On Sep 21

- ஜனாதிபதியின் பாரியார் சொந்த செலவில் அவருடன் பயணம்

செப்டெம்பர் 21ஆம் திகதியன்று நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  கலந்துகொள்ளும் முதல்  சந்தர்ப்பமும் நாடு கடந்து, சர்வதேச கூட்டத்தொடரொன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில், பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே, ஆகியோரும், ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

தன்னுடைய தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, குறைந்தளவு தொகையினருடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள, ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அதன்படி, அண்மைக்கால வரலாற்றில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரொன்றில், உள்நாட்டில் இருந்து குறைந்தளவு தொகையினர் கலந்துகொள்வது இதுவென்பதுடன், அயோமா ராஜபக்ஷ அம்மையார்,  தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.