சீனி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி!

பதுக்கி வைத்தால் அரசுடைமையாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம்: உள்நாட்டு சீனி உற்பத்தியை இரட்டிப்பாக்கி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நிரந்தர ஏற்பாடு

“சீனி இல்லாமல் தேநீர் குடிப்போம். அரிசி இல்லாமல் உணவு சாப்பிடுவோம்” என முன்னர் ஊர்வலங்களின் போது மக்கள் கோஷங்களை எழுப்பினார்கள். ஆனால் மக்களால் சீனி இல்லாமல் தேநீர் குடிக்க முடியாது. ஆனால் சீனி இன்று சந்தையில் அதிகரித்துள்ளது. ஆனால் களஞ்சியசாலைகளில் இலட்சக்கணக்கான மெற்றிக் தொன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த எட்டு மாத காலமாக இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள் இதனை சந்தையில் விற்பனை செய்ய முன்வரவில்லை. அதிக இலாபம் பெறுவதற்காக சீனித் தட்டுப்பாடு உள்ளதாக செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்கள். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.

புள்ளிவிபரத்துடனான அறிக்கைகளின்படி 2020 ஆம் ஆண்டு சீனியின் இறக்குமதி வரி 25 சதமாக குறைக்கப்பட்ட பின்னர் ஆறு மாத காலத்துக்குள் இந்நாட்டிற்கு ஒரு வருடத்துக்கும் அதிகமாகத் தேவைப்படும் சீனி மொத்தமாக கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்படாத களஞ்சியங்களில் இரகசியமாக சேமிக்கப்பட்டது.

எமது நாட்டின் வருடாந்த சீனித் தேவை 5.5-6 இலட்சம் மெற்றிக் தொன்னாகும். மாதாந்த சீனிப் பாவனை 35000--50000 மெற்றிக் தொன்னாகும். 2018 ஆம் ஆண்டு 460872 மெற்றிக் தொன் சீனி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதோடு, நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு 57265 மெற்றிக் தொன்னாகும். இந்நாட்டிற்கு சீனி இறக்குமதி செய்வதற்காக வருடமொன்றுக்கு கோடிக் கணக்கான ரூபா செலவாகின்றது என மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்னர் ச.தொ.சவில் ஒரு கிலோ சீனி 99 ரூபாவுக்கு விற்கப்பட்டது. ஆனால் ஒகஸ்ட் 28 ஆம் திகதி அளவில் திறந்த சந்தையில் சீனி ஒரு கிலோ 220 - 240 ரூபாவாக விற்கப்பட்டது. 2021 ஓகஸ்ட் மாத முடிவில் ச.தொ.ச கிளைகளிலோ கூட்டுறவுக் கடைகளிலோ சீனியை காண முடியவில்லை.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியளவில் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோவுக்கு 25 சதம் என இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. அதன்படி அரசு சீனி ஒரு கிலோவின் விற்பனை விலையை 85 ரூபாவாக நிர்ணயித்தது. ஆனால் இந்நாட்டிற்கு 2020 ஒக்டோபர் 14 தொடக்கம் 2021 ஜூன் வரை குறைந்த இறக்குமதி வரியுடன் கொண்டு வரப்பட்ட 58400 மெற்றிக் தொன் சீனியை பதுக்கி வைத்து நாட்டில் சீனி தட்டுப்பாட்டை சில வியாபாரிகள் தந்திரமாக ஏற்படுத்தினார்கள்.

இதேவேளை 2020 நவம்பர் மாதம் முதல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சீனி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் தகவலுக்கு அமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் வத்தளை மாபோல பிரதேச களஞ்சியம் ஒன்றில் காணப்பட்ட 4800 தொன் சீனியை கைப்பற்றியதுடன், களஞ்சியத்திற்கும் சீல் வைத்தார்கள். இவ்வாறு பல இடங்களில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி இந்த மாபியாவுக்கு முடிவு கட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் 2 வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, அந்த கட்டளைச் சட்டத்தின் ii பிரிவில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை அதிகாரத்துக்கு உட்படுத்தி, 5வது பிரிவின் விதிகளுக்கு அமைய சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பான அவசர சட்ட விதிகள் 30ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டன.

சாதாரண மக்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை ஒருங்கிணைக்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் என்.டி.எஸ்.பி நிவுன்ஹெல்ல நியமனம் செய்யப்பட்டார்.

அதன் பிரகாரம் அவர் அனுமதியின்றி களஞ்சியங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்த சீனியின் அளவை ஆராய்ந்து அவற்றை அரசுடைமையாக்க கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் நடவடிக்கை மேற்கொண்டார். அவ்வாறு 29,900 மெட்ரிக் தொன் சீனி விசாரணையின் பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட தாக அவர் தெரிவித்தார். இந்த தொகை கட்டுப்பாட்டு விலையில் அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் சீனி விலை அதிகரிப்புக்கு காரணம் 2020 அக்டோபர் மாதம் சீனி இறக்குமதி வரி 25 சதமாக குறைக்கப்பட்ட வேளையில் இறக்குமதியாளர்கள் சீனியை இறக்குமதி செய்து பதுக்கியதனாலாகும் என தெரிவித்தார்.

“அரசாங்கம் இது குறித்து கூடிய கவனம் செலுத்தவில்லை. ஊடக நிறுவனம் அதனைக் கண்டு கண்டுபிடிக்கும் வரை நுகர்வோர் அதிகார சபை இவற்றை கண்டுபிடிக்கவில்லை. தற்போது விற்பனைக்கு உள்ள சீனியும் தரம் குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்த களஞ்சியசாலைகள் குறித்து நுகர்வோர் அதிகார சபை உரிய நேரத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இவ்வாறு சீனியின் விலை அதிகரித்திருக்காது” என அசேல சம்பத் தெரிவித்தார்.

அரசாங்கம் எதனைக் கூறினாலும் கடந்த வாரம் புதன்கிழமை ச.தொ.ச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்கு சலுகை விலையில் ஒரு கிலோ சீனி மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்பட்டது.

“எனது குடும்பத்தில் அங்கத்தவர்கள் 7 பேர் உள்ளார்கள். இந்த ஒரு கிலோ சீனி இரண்டு நாட்களுக்கு கூட போதுமானதல்ல. ஒரு மணித்தியாலம் அளவில் வரிசையில் நின்று இந்த ஒருகிலோ சீனியை பெற்றுக் கொண்டேன். சீனிக்காக வரிசையில் நின்று எமக்கு கொரோனாவும் தொற்றலாம்” என்று வரிசையில் நின்று சீனியை வாங்கிய பாவனையாளர் ஒருவர் கூறினார்.

சீனி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. உணவு வகைகளுக்கான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நுகர்வோர் சட்டத்தின் அதிகாரம் போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறிய பயிர்ச் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற இந்நாட்டில் சீனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இலங்கை சீனி நிறுவனம் மற்றும் இந்நாட்டில் சீனி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க செய்து ஒரு கிலோ சீனியை 125 ரூபாவாக ச.தொ.ச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை சீனி நிறுவனம் இந்நாட்டில் சீனிப் பற்றாக்குறை மற்றும் சீனி விலை ஏற்றத்துக்கு மாற்று வழியாக சீனி உற்பத்தி அளவை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் இயக்குனர் மேஜர் வஜிர குமாரதுங்க தெரிவித்தார்.

“எமது தலைவர் ஜனக்க நிமல சந்திர மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரி காமினி ராசபுத்திர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நாம் கரும்பு உற்பத்தி செய்யும் பரப்பளவை 3500 ஹெக்டயரிலிருந்து 7000 ஹெக்டயராக அதிகரித்துள்ளோம். இதன் மூலம் எமது சீனி உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என அவர் தெரிவித்தார்.

சீனியை தட்டுப்பாடின்றி முழு நாட்டுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கூட்டுறவு சேவைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறியதாவது:

“எதிர்வரும் வாரங்களில் இந்நாட்டில் சீனியின் விலை 122 -128 ரூபாவாக காணப்படும். இறக்குமதியாளர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30000 மெற்றிக் தொன் சீனியும் மற்றும் தவறான விதத்தில் இறக்குமதி செய்யப்பட்டதால் துறைமுகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனி தொகை 30000 மெற்றிக் தொன்னும் நுகர்வோருக்கு 130 ரூபா அளவில் வழங்குவதற்கு தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது வியாபாரிகளால் சீனியை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அரசுடைமையாக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம் சீனி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.

இது குறித்து வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் வினவிய போது “அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்தால் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் சலுகை விலையில் ச.தொ.ச, கூட்டுறவு மற்றும் Q Shop மூலம் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை தடுப்பதற்காக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி பொதி செய்யப்படாத வெள்ளைச் சீனி ஒரு கிலோவின் அதிகூடிய விற்பனை விலை 122 ரூபாவாகும். பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகூடிய விற்பனை விலை 125 ரூபாவாகும். மண்ணிற சீனி பொதி செய்யப்படாதது 125 ரூபாவும், பொதி செய்யப்பட்டது 128 ரூபாவுமே அதி கூடிய விற்பனை விலை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

--நிஹால் பி அபேசிங்க...

தமிழில்: வீ.ஆர். வயலட்