அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; 3 கட்டங்களாகவே தீர்வு வழங்கல்

நிதி நெருக்கடியால் ஒரே சந்தர்ப்பத்தில் தீர்வு சாத்தியமில்லை

நிதி நெருக்கடிகளின் காரணமாக அதிபர் ,ஆசிரியர்களின் சம்பள உயர்வை ஒரே சந்தர்ப்பத்தில் வழங்க முடியாது.

எனவே மூன்று கட்டங்களாக அதனை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (07) செவ்வாய்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இதன் போது நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்குவதில் காணப்படும் சிக்கல் தொடர்பில் கடந்த வாரம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் , அதிபர்களின் சேவைகளில் தரங்களின் அடிப்படையில் 17 – 26 வீதம் வரை சம்பள அதிகரிப்பு இடம்பெறுவது வழமையாகும். இதனை ஒரே சந்தர்ப்பத்தில் வழங்குமாறு சங்கங்கள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும் நிதி நெருக்கடி காரணமாக அதனை மூன்று கட்டங்களாக வழங்குவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார் என்றார்.


Add new comment

Or log in with...