தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் வியந்து பாராட்டும்படி கல்முனை மக்கள் ஆர்வம்!

முதலாவது தடுப்பூசி ஏற்றியோர் 95% வீதத்தை தாண்டியது; மக்கள் சாரிசாரியாக தடுப்பூசி நிலையங்களுக்கு வருகை; அதிகாரிகள், பொலிசார், படையினர், ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது நாட்டின் நாலா பக்கங்களிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாக சர்வதேச சமூகம் எமது நாட்டுக்கு சான்றிதழ் வழங்கி இருப்பது பாராட்டக் கூடிய விடயமாகும்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் தடுப்பூசியை ஏற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தமது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதுடன்,தொடர்ந்தும் மக்கள் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தற்போது 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸ் (2nd Dose) தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவை பொறுத்தளவில் இங்கு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் என மூவின மக்களும் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரைக்குமான பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கீழ் 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் காணப்படுகின்றன. இங்கு மக்கள் தொகை 459047. இவர்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான 206587 பேர் உள்ளனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை (ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை) 197367 பேர் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர். இது 95.53% வீதமாகும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை 81371 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. இது 39.38% வீதமாகும்.பிராந்தியத்தில் சுமார் 99 வீதமான அரச உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள், வைத்தியசாலைகளுக்கு வருகை தர முடியாதவர்களுக்கு சுகாதார தரப்பினர் வீடு வீடாக சென்று இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தொற்றா நோய்களுக்கு ஆளாகி நீண்ட நாட்களாக வீடுகளில் இருப்பவர்களுக்கு அவர்களின் குடும்பத்தவர்கள் ஊடாக கொரோனா தொற்று நோய் பரவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதனால் இவர்களுக்கும் வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் வியந்து பாராட்டிப் பேசும் அளவுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பணியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என பலரும் ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது பிராந்தியத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேடமாக அமைக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் அதிக ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்கின்றனர்.

பொதுமக்கள் தடுப்பூசி ஏற்றுவதில் அதிக ஆர்வத்தோடு முண்டியடித்துக் கொண்டு வருவதை சுகாதார தரப்பினர் பாராட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை அடுத்து மக்கள் தமது தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்வதில் இவ்வாறான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கர்ப்பிணித் தாய்மார் முதியோர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது, சுகாதார தரப்பினர் மற்றும் ஊடகத்துறையினர் வழங்கிய விழிப்புணர்வின் வெளிப்பாடாகும்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கல்முனை, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை,மருதமுனை மற்றும் பெரியநீலாவனை பிரதேசங்களில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முறைமைக்கு அமைய அந்தந்த பிரதேச மக்கள் அந்தந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் தடுப்பூசியை ஏற்றுக் கொள்வதற்காக விசேட தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ. ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார். இங்கு 21394 பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெற்றன. தடுப்பூசி ஏற்றும் இந்த நடவடிக்கைகளில் வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள், பட்டதாரி பயிலுனர்கள், பிரதேச சிவில் கொரோனா தடுப்பு செயலணி உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், பொலிசார், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் என பலரும் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசியை ஏற்றிக் கொண்டாலும் சுகாதார சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவது அவசியமாகும். முகக் கவசம் அணிந்துகொள்ளுதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை அவசிய விதிமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிப்பது தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் ஒன்றுகூடல்கள், களியாட்ட நிகழ்வுகள், தேவையில்லாத போக்குவரத்து போன்ற அலட்சியமான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டு சிலர் 'தாம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளோம், எமக்கு கொரோனா தொற்று ஏற்படாது' என்ற மனஉணர்வோடு சுகாதார சட்ட விதிமுறைகளை மறந்து செயற்படுகின்றனர். இது பிழையான முன்மாதிரியாகும். நம்மை நாம் பாதுகாப்பதோடு அடுத்தவரையும் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்போடு செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. கொரோனாவோடு வாழ்வோம் எனும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் ஆபத்தான சூழலை உருவாக்கிக் கொள்ளாமல் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களே கருத்தில் எடுத்து விரைவில் இயல்புநிலைக்கு செல்லுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்குவதே இன்றைய தேவையாகும்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்...

(பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...