ரிஷாட் பதியுதீனுக்கு செப்டெம்பர் 07 வரை 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனுக்கு செப்டெம்பர் 07 வரை 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-Rishad Bathiudeen-Re-Remanded until Sep 07-Hejaaz Hisbullah Re-Remanded till September 15

- ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோருக்கு செப். 15 வரை விளக்கமறியல் நீடிப்பு

கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை மேலும் 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (01) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

கொவிட்-19 தொற்று நிலை கருதி நீதிமன்றிற்கு அவர் அழைத்து வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன், கைத்தொழில் வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சினமன் கிராண்ட் தாக்குதல்தாரியான மொஹமட் இப்ராஹிம் அஹமட் இன்ஷாப் என்பவரின் வெல்லம்பிட்டியிலுள்ள தொழிற்சாலைக்கு கைத்தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உலோகப் பொருட்கள் மூலம் குறித்த தாக்குதல்தாரி முறையற்ற வகையில் சம்பாதித்த பணத்தை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பான குறித்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...