கொடிய வியாதிகளிலிருந்து மக்களை பாதுகாக்க இரசாயன பசளைகளை முற்றாகவே ஒழிப்போம்!

அசேதன இரசாயனங்களுக்கு மாற்றாக உயிரியல் அடிப்படையிலான உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அத்துடன் விவசாயத்தில் செயற்கை இரசாயனங்களின் பாவனை காரணமாக உருவாகும் பாதகமான விளைவுகள் சேதன விவசாயம் பற்றிய தேவையை அதிகரித்துள்ளன.

சேதன உரங்கள் சிறு துணிக்கைகளாக்கப்பட்ட பாறை, தாதுக்கள், இயற்கை தாவர மற்றும் விலங்குப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும், சேதன விவசாயம் என்பது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் மண்ணின் பல்லுயிர் பெருக்கத்தையும் சேர்க்கும் உத்திகளில் ஒன்றாகும்.

இரசாயன உரங்கள் ஓர் குறித்த அளவிலான நைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் அவற்றின் அளவுக்கதிகமான பயன்பாடு நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை மாசடையச் செய்கிறது. இது சம்பந்தமாக உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிலையான முறையில் 'ஊட்டச்சத்து நிறைந்த உயர்தர உணவை' உற்பத்தி செய்வதற்கு சமீபத்திய முயற்சிகள் மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

செயற்கை உரங்களின் கண்மூடித்தனமான பயன்பாடு மண் மாசுபடுவதற்கும், நீர்நிலைகள் மாசுபடுவதற்கும் வழிகோலுகின்றது. நுண்ணுயிர்கள் மற்றும் மண்ணின் வளத்தைப் பாதுகாக்கும் புழு, பூச்சிகளை அழித்து பயிரை நோய்களுக்கு ஆளாக்குவதுடன் மண் வளத்தையும் குறைக்கிறது. இவ்வாறு ஊட்டச்சத்து அகற்றுதல் காரணமாக மண்வளத்தை குறைத்தலானது சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்த கவலைகளை அதிகரித்து எம்மிடையே நிலையான விவசாயத்திற்கான அச்சுறுத்தலை அதிகரிக்கின்றது.

குறைவான மூலப்பொருட்கள் மற்றும் குறைவான நுண்ணுயிர் செயல்பாடுகளைக் கொண்ட இத்தகைய 'மலட்டுத்தன்மையுள்ள' மண், கரையக் கூடிய இரசாயன மூலப்பொருட்களை தக்க வைக்கும் தன்மை அற்றது. ஆய்வுகளின் அடிப்படையில் 30 வீதத்துக்கும் குறைவான அசேதனப் பசளைகள் பயிர்களால் உறிஞ்சப்பட்டு ஏனைய 70 வீதமான இரசாயனப் பொருட்களும் நீரோடைகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசனத் தொட்டிகள் மற்றும் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் சேர்க்கப்படுகின்றன. இதனால் யூட்ரோஃபிகேஷன் மற்றும் ஹைப்பர்-யூட்ரோஃபிகேஷனுக்கும் வழிவகுக்கிறது. அத்துடன் இதன் விளைவாக நீர்நிலைகளின் மேற்பரப்பில் சயனோபாக்டீரியா (நீல-பச்சை அல்கா) மூலம் பாசி உருவாக்கம் ஏற்படுகிறது, அவற்றால் பல மனிதர்கள் உட்பட விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை இப்பாசிகள் உருவாக்குகின்றன.

காய்கறிகளில் கலக்கிற பூச்சிகொல்லிகளும், இரசாயனங்களும் நுண்சத்துகளை முழுமையாக அழித்து விட்டன. குறிப்பாக மாலிப்டினம், செலினியம் போன்ற தாதுக்களே கிடைப்பதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, ஆயுட்காலம் குறைவு, புற்றுநோய், இதயநோய் என்று பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இப்போது நிலமே நஞ்சாகி விட்டதால் அந்தப் பாதிப்பு இன்னும் அதிகம் ஆகலாம்.

இதற்கு மாற்றீடான சேதன விவசாயம், பெரும்பாலும் மண்ணில் இயற்கையாக் காணப்படும் நுண்ணுயிர்களைச் சார்ந்துள்ளது. இது அனைத்து வகையான பயனுள்ள பக்டீரியா மற்றும் பூஞ்சைகளையும் பாதுகாக்கின்றது. ஆராய்ச்சிகளின் விளைவாக நுண்ணுயிரிகளின் பயனுள்ள விகாரங்களைக் கொண்ட தயாரிப்புக்கள் தோன்றியுள்ளன. இது இயற்கை முறையில் மண் வளத்தை மேம்படுத்துகிறது. இயற்கையில் பல பயனுள்ள மண் நுண்ணியிரிகள் உள்ளன. இவற்றில் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும் திறமையான உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவற்றை வளர்ப்பதன் மூலமும், நேரடியாகவோ அல்லது விதைகள் மூலமாகவோ அவற்றை மண்ணில் சேர்ப்பதன் மூலமும் பயிருக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யலாம். வளர்க்கப்பட்ட நுண் உயிர்கள் கடந்து பொருளுடன் கலக்கப்பட்டு பைகளில் அடைக்கப்பட்டு வயல் வெளிகளில் இடுவதற்கு ஏற்றதாக இருக்கும் உரமே உயிர் உரம் ஆகும். அதாவது இவவுயிர் உரங்களில் முக்கியமான உள்ளீடு நுண்ணுயிரங்கிகளாகும்.

உயிர் உரங்களின் நன்மைகள்:

உயிர் உரங்கள் மண்ணில் உள்ள வளிமண்டல நைட்ரஜனை மண்ணிலும் வேர்முடிச்சுக்களிலும் நிலைநிறுத்தி பயிருக்கு கிடைக்குமாறு செய்கின்றன. அவை இரும்பு மற்றும் அலுமினிய பொஸ்பேட்டுக்கள் போன்ற பொஸ்பேட்டுக்களின் கரையாத வடிவங்களைப் பயிருக்கு கிடைக்கக் கூடிய வடிவங்களுக்கு மாற்றுகின்றன.

அவை மண் அடுக்குகளிலிருந்து பொஸ்பேட்டைத் தாவரங்களின் வேர்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்றன. அவை வேர் வளர்சிச்சியை ஊக்குவிக்கும் ஹோர்மோன்களை உருவாக்குகின்றன.

அவை கரிமப் பொருள்களை சிதைத்து தாவரத்திற்கு எளிதில் கிடைக்கக் கூடிய கனியமாக மாற்றுகின்றன. விதை அல்லது மண்ணில் பயன்படுத்தும் போது, உயிர் உரங்களின் ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதை அதிகரிக்கின்றன. மற்றும் மண்ணையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தி விளைச்சலை 10 முதல் 25 வீதம் வரை மேம்படுத்துகின்றன.

உயிர் உரங்களின் வகைகள்:

நுண்ணுயிர்களின் வகையின் அடிப்படையில், உயிர் உரத்தையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

பக்டீரியா உயிர் உரங்கள் – ரைசோபியம், அசோஸ்பிரிலியம், அசோடோபாக்டா, பொஸ்போபக்டீரியா, பூஞ்சை உயிர் உரங்கள் – மைக்கோரைசா, அல்கல் உயிர் உரங்கள் - நீல பச்சை அல்கா மற்றும் அசோலா

ஒக்டினைமைசீட்ஸ் உயிர் உரங்கள் : பிரான்கியா

பொதுவான உயிர் உரங்களின் சிறப்பியல்புகள்:

ரைசோபியம்: ரைசோபியம் ஒப்பீட்டளவில் மிகவும் பயனுள்ள மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் உயிர் உரமாகும். ரைசோபியம், பருப்பு வகை பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. பருப்பு வகைகள் மற்றும் ரைசோபியம் பக்டீரியத்துடனான கூட்டுறவின் விளைவாக வளிமண்ட நைதரசனை நிலைநிறுத்தும் வேர்முடிச்சுக்கள் உருவாகின்றன. பருப்பு வகை பயிர்கள் இல்லாத நிலையில் மண்ணில் ரைசோபியத்தின் எண்ணிக்கை குறைகிறது. பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்: பச்சை பயறு, உளுந்து, கொள்ளு, நிலக்கடலை, சோயாபீன்ஸ்

அசோஸ்பைரில்லம்: அசோஸ்பிரிலம் உயர் தாவர அமைப்புடன் நெருக்கமான துணை கூட்டுவாழ்வைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சோளம், வரகு, சாமை, பிற சிறு தினைகள் மற்றும் தீவன புல் போன்ற தானியங்களுடன் இந்த பக்டீரியாக்கள் இணைந்து தழைச்சத்தை அப்பயிருக்கு கொடுக்கிறது.

அசோடோபாக்டர்: இது ஒரு பொதுவான மண் பக்டீரியம். இந்த பக்டீரியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கியமான காரணி மண் கரிமப் பொருளாகும். பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் கோதுமை, சோளம், பருத்தி, கடுகு, கரும்பு. இதுவும் மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது.

நீலப் பச்சை அல்கா நெல் வயலில் ஏராளமாக இருப்பதால் நீல பச்சை அல்காக்கள் அரிசி உயிரினங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாஸ்போபக்டீரியா நுண்ணுயிரானது பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிருக்கு எளிதாக கிடைக்கும் நிலைக்கு மாற்றுகின்றது. அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 10 – 30வீதம் விளைச்சலை அதிகரிக்கிறது. இவற்றை பாறை பொஸ்பேட் உடன் கலந்து உபயோகப்படுத்தலாம். இது வேரை சுற்றிலும் மற்றும் வேருக்குள்ளும் வாழும் பூஞ்சை, பூசண இழைகள் மண்ணில் அதிக பகுதிகளில் வளர்ந்து மிக தொலைவில் உள்ள சத்துக்களை வேருக்கு கொண்டு சென்று சேர்க்கிறது. இதனை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

விவசாயத்தில் நுண்ணுயிர் பரிமாற்ற சிகிச்சை, பல்வேறு பயிர்களுக்கு தாவர நோய்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சாத்தியமான அணுகுமுறையாக இருக்கின்றது. இரசாயன உரங்களின் விலை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகிய இரண்டின் பின்னணியில், இரசாயன உரங்கள் மீது அதிகப்படியான நம்பகத்தன்மை என்பன நீண்ட காலத்திற்கு சாத்தியமானதல்ல.

இந்த சூழலில், சேதன உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் உற்பத்தியை அதிகரிப்பது விவசாயிகளுக்கு சாத்தியமானதாக இருக்கும். திரவ உயிர் உரம் இப்போது ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பம் என்பதுடன் வழக்கமான அடிப்படையிலான உயிர் உரங்களை விட அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது. மற்றும் இது உயிர் உரத் தொழில்நுட்பத் துறையில் ஒரு முன்னேற்றமானதொன்றாகக் கருதப்படுகிறது. மேலும் விவசாயிகள், விரிவாக்கத் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் உயிர் உரங்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

விவசாய உற்பத்தி அமைப்பில், அதிக அளவு இரசாயன உள்ளீடுகள் விவசாய பயிர் உற்பத்தி முறைகளின் நிலைத்தன்மையை பாதித்துள்ளன. உற்பத்திச் செலவை அதிகரித்தது, மற்றும் உற்பத்தித்திறன்களில் சரிவை ஏற்படுத்தியது, மேலும் உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை பராமரிப்பதில் கடினமான சவாலாக மாறியுள்ளது. பரிந்துரை செய்யப்படாத மற்றும் சமநிலையற்ற உரங்கள் (பெரும்பாலும் யூரியா) மண்ணின் ஆரோக்கியத்தை கணிசமாகக் குறைக்க வழிவகுத்துள்ளன.

இந்த வளங்கள் மற்றும் ஆற்றல்கள் அனைத்தும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டால், சவால்களைச் சமாளித்து, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை என்றென்றும் வழங்குவதற்காக சுற்றுச்சூழல் நட்புமுறையிலான இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக அடைய முடியும். நமது எதிர்கால சந்ததியை ஆபத்தான நோய்களிலிருந்து காப்பாற்றுவோம்.

சந்திரகாந்தா மகேந்திரநாதன்
சிரேஷ்ட விரிவுரையாளர் தாவரவியல் துறை,
விஞ்ஞான பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை

 


Add new comment

Or log in with...