வட மத்திய மாகாணத்தில் மின் பாவனையாளர் நடமாடும் சேவை 100 வீத வெற்றி

வட மத்திய மாகாணத்தில் மின் பாவனையாளர் நடமாடும் சேவை 100 வீத வெற்றி-PUCSL Workshop at North Central Province

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கான நடமாடும் சேவை திட்டத்திற்கமைய வட மத்திய மாகாணத்தில் சுமார் 350 மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து 100 வீத வெற்றி மட்டத்தை அடைந்துள்ளதாக, மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துனரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுமக்களை தேடிச் சென்று அவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட்டு வருகிறது. மின்சார பாவனையாளர்களை அணுகி அவர்களின் குறைகள் மற்றும் முறைப்பாடுகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்சினைகளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உச்ச சேவை தரத்துடன் தீர்ப்பதற்காக இந்த மின்சார பாவனையாளர்களுக்கான நடமாடும் சேவை திட்டமிடப்பட்டுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தகவல்களை கோரும் பாவனையாளர்களுக்கு ஒழுங்குறுத்தல் கருவிகளைப் பகிரவும், வழங்குநர்களின் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தல், பிரதேச செயலாளர்களின் அதிகாரங்களின் கீழ் உள்ள வழி அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், புதிய மின் இணைப்புகளை வழங்குதல் போன்ற மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை கேட்டறிந்து அதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த நடமாடும் சேவையானது 09 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும். இந்த முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (LECO) மற்றும் பிரதேச செயலகம் ஆகியன பங்காளர்களாக விளங்குகின்றன.

பாவனையாளர் மற்றும் உரிமதாரர் செயல்படுத்த ஒப்புக்கொண்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகக் கருதப்படும். அதற்கமைய பாவனையாளர் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் மற்றும் உரிமம் பெற்றவர் கோரிக்கையை செயல்படுத்தியவுடன் ஆணைக்குழு தனது முடிவை வெளியிடும். உதாரணமாக, மின்சார கணக்கின் பெயர் மாற்றங்களின் போது, பாவனையாளர் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் உரிமதாரர் அடுத்த மின்பட்டியல் சுழற்சிக்கு முன் பெயரை மாற்ற வேண்டும்.

வட மத்திய மாகாணத்தின் புள்ளிவிபரங்களின்படி, பெரும்பாலான சிக்கல்கள் புதிய மின் இணைப்பு பெறுவது மற்றும் கட்டண வாடிக்கையாளரின் மாற்றம் தொடர்பானவையாக காணப்பட்டன. மின் கட்டணத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. வட மத்திய மாகாணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

முறைப்பாட்டு வகை
வழி அனுமதி 69
கட்டண வாடிக்கையாளர் மாற்றம் 85
மீட்டர் தொடர்பானவை 29
புதிய இணைப்பு 98
தரம் தொடர்பானது 14
மின் பட்டியலிடல் தொடர்பானது 13
ஏனையவை 07

அடுத்த நடமாடும் சேவையினை ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் மத்திய மாகாணத்திலும், செப்டம்பர் மாதத்தில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் முன்னெடுக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

2021 ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு 481 மின்சார முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2020ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 555 மின்சார முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் 415 மின்சார முறைப்பாடுகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் குறித்த காலப்பகுதியில் தீர்க்க முடிந்துள்ளதுடன், ஏனையவை முறைப்பாடுகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான பிரச்சினைகள் வழி அனுமதி, மின் பட்டியலிடல், புதிய இணைப்புகள், மீட்டர் தொடர்பானவை, கட்டண வாடிக்கையாளர் மாற்றம் மற்றும் மின்சாரம் தரம் தொடர்பானவையாகக் காணப்படுகின்றன.


Add new comment

Or log in with...