செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பது நிச்சயமில்லை

செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பது நிச்சயமில்லை-Couldn't Re-Open Schools in September First Week

- பணி பகிஷ்கரிப்புக்கு உகந்த காலம் இதுவல்ல
- பழிவாங்கப்படுவது மாணவர்களே
- 622,000 பேரின் A/L பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம்

தற்போதைய நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பது நிச்சயமற்றது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (09) பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓகஸ்ட் மாத இறுதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கி முடித்த பின்னர் செப்டெம்பர் முதல் வாரத்தில் திட்டமொன்றின் கீழ், படிப்படியாக பாடசாலைகளை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆயினும் தற்போதைய நிலையில் ஓகஸ்ட் இறுதியில் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் அதனை மேற்கொள்வது நிச்சயமற்றதாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் தொலைதூர கல்வியான ஒன்லைன் முறை மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக, சமூகத்தில் மிகவும் கஷ்டமான நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளின் பொருட்டு, ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகளை மிகவும் வலுவானதாக மாற்றி, விஸ்தரிப்பது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது.

ஆயினும் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக ஆசிரியர்கள் அறிவிப்பார்களாயின், இது யாரை பழிவாங்கும் செயல்? இந்த அனைத்து அழுத்தங்களும் மாணவர்களையே பாதிப்படையச் செய்கின்றன.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்சினையல்ல, இது கடந்த 24 வருடங்களாக காணப்படுகின்றது. இந்த 24 வருடங்களில், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது, கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து நாம் விலகிக் கொள்கிறோம், பணி நிறுத்தம் செய்கின்றோம் என எமது ஆசிரியர் சமூகம் முன்வரவில்லை.

இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் அதற்கான காலம், அதற்கான உகந்த நேரம் இதுவா? என்பதை அறிய வேண்டும். இக்காலப்பகுதியில் இச்செயற்பாட்டை முன்னெடுப்பது பொறுப்பானதா என, நான் மிகவும் பணிவுடன் கேட்க விரும்புகிறேன், என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளுக்கமைய, ஆசிரியர்களின் பிரச்சனையை தீர்க்க சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களில் வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வழங்குவதாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே நிறைவடைந்த 2020 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வழங்க முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய 622,000 பேரில், 169,000 பேர் கலைப் பிரிவில் தோற்றியுள்ளனர். கொவிட் தொற்றுநோய் காரணமாக அது தொடர்பான பிரயோக பரீட்சைகளை நடத்த முடியவில்லை. ஆயினும் அப்பரீட்சைகளை நடாத்துவதற்கு அவசியமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக 2020 இல் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மொத்தமாக 622,000 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளது. இவ்வாறான விடயத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.


Add new comment

Or log in with...