அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல்; சுற்றுநிருபம் வெளியீடு

அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல்; சுற்றுநிருபம் வெளியீடு-State Employees to the Service-Circular

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மற்றும் அரச சேவைகளை தடையின்றி வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலித்து குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கமைய, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் குறித்த சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, அனைத்து அரசு நிறுவனங்களின் ஊழியர்களும் வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது பணிக்கு சமூகளிக்கும் வகையில் குழுக்களாக அமைத்து, அக்குழுக்கள் நிறுவனத்தின் சேவைகளை தொடர்ச்சியாக வழங்கும் வகையில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு ஊழியர்களை அழைக்கும் போது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் உள்ள தாய்மார்களை அழைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைக்கப்படும் ஊழியர்கள் உரிய தினத்தில் பணிக்கு சமூகமளிக்காத நிலையில் மாத்திரம் அவர்களது அவர்களது சொந்த விடுமுறையிலிருந்து குறைக்க நவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக்கு அழைக்கப்படாத தினங்களிலும் ஊழியர்கள் Online முறை மூலம் தங்களது பணிகளை செய்ய கடமைப்பட்டுள்ளார்கள் என்பதோடு, நிறுவனத் தலைவரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற அல்லது அவ்வாறு அனுமானிக்கின்ற மற்றும் ஏனைய விசேட காரணங்களின் அடிப்படையில் பணிக்கு அழைக்க முடியாது என நியாயமான காரணங்களை வழங்குகின்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பது அல்லது மாற்று அலுவலக சேவைகளை வழங்குதல், வீட்டிற்கு அருகிலுள்ள வேலைத் தலத்தில் வேலை செய்ய அனுமதித்தல் போன்ற, உரிய ஊழியரின் நலனை பேணும் வகையில் நெகிழ்வான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு  நிறுவனங்களின் அல்லது பிரிவுகளின் தலைவர்களின் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...