இந்த வருடத்தில் நேற்றுவரை 08 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் 08 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பண்டாரகம பகுதியில் நேற்றைய தினம் 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் 40 கிலோ கிராமை போலிசார் கைப்பற்றி உள்ள நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலேயே மேற்படி செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு மேலும் தெரிவித்த அவர், நேற்று கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருளுடன் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியில் 473 கிலோ போதைப் பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அவற்றில் ஐஸ் ரக போதைப்பொருள் 300 கிலோகிராம் உள்ளடங்குவதாகவும் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 8 பில்லியன் ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் நேற்று வரையான காலப்பகுதியில் 12,890 சந்தேகநபர்களும் ஐஸ் ரக போதைப்பொருள் தொடர்பில் 1,457 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Add new comment

Or log in with...