2 ஆண்டுகளின் பின் பேச்சுவார்த்தைக்கு வட, தென் கொரிய தலைவர்கள் இணக்கம்

வட கொரியா, தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.

உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா தீர்மானங்கள் என எதையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா, வடகொரியா இடையே நேரடியாக பகை ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதங்களில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையே 2 முறை வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால், இவை தோல்வியில் முடிந்ததால், அதன் பின்னர் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இதனிடையே, எல்லையில் தங்கள் நாட்டிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதை தடுக்க தவறி விட்டதால் தென் கொரியாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையையும் வட கொரியா கடந்தாண்டு முறித்து கொண்டது.

ஆனால், கடந்த ஏப்ரல் முதல், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இருதரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாக தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினர்.

இதன் விளைவாக, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென் கொரிய செய்தி தொடர்பாளர் பார்க் சூ யூன் கூறுகையில், "இரு தரப்பிலும் பரஸ்பர உறவை விரைவில் மீண்டும் வளர்த்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.


Add new comment

Or log in with...