சீனாவில் பெருகி வரும் ரசிகர் வட்ட கலாசாரம்

ஷென் சூ (Chen Xue) என்ற யுவதி தினமும் காலையில் தனது பொப் இசை நட்சத்திரம் லுவோ யிஷூ பற்றிய புதிய செய்திகளை அறிந்துகொள்வதற்காக சமூக ஊடகங்களை ஆராய்வதுடன், ஏற்கெனவே எண்ணற்ற தடவைகள் கேட்டும் பார்த்தும் ரசித்த லுவோவின் பாடல்களையும் இசை வீடியோக்களையும் மீண்டும் ரசிப்பார். லுவோவின் நேயர் விருப்பக் கணிப்பீட்டு எண்ணிக்கையை சமூக ஊடகங்களில் உயர்த்துவதற்காகவும் அவரின் பாடல்களின் குறுவட்டுகள் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஷென் இவ்வாறு செய்கிறார்.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கைச் சேர்ந்த 23 வயதான இந்த யுவதி இவ்வருட முற்பகுதியில் லுவோ போட்டியொன்றில் பங்குபற்றிய போது அவர் மீது ஒரு நேசத்தை வளர்த்துக் கொண்டார். அன்றிலிருந்து தினமும் காலையில் ஷென் இவ்வாறு செய்கிறார்.

ஷென் மாத்திரமல்ல சமூக ஊடக வலைப்பின்னல் செயலியான Social Networking app QQ இல் 1000 உறுப்பினர்களைக் கொண்ட சம்பாஷணை குழுவிலும் ஷென் இணைந்து தீவிரமாக இயங்குகிறார். ஷென்னைப் போன்ற உறுப்பினர்கள் பொப் நட்சத்திரம் லுவோவின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். திறமைப் போட்டியின் போது அவருக்கு வாக்களிப்பதற்காக அவர்கள் பெருமளவு பணத்தை செலவு செய்யவும் தயாராயிருக்கிறார்கள். இணையவெளியில் லுவோவைப் பற்றி அனுகூலமான கருத்துகளை அவர்கள் பதிவிடுவதுடன் போட்டி நிகழ்ச்சிக்கான பல டிக்கெட்டுக்களையும் அல்பங்களையும் வாங்குகிறார்கள். அவரின் விளம்பரப் பலகைகளுக்காக பெருவாரியான மக்களிடமிருந்து இந்த ரசிகர்கள் பணம் வசூலிக்கிறார்கள்.

சீன சமூக ஊடகங்களில் இத்தகைய ரசிகர் குழுக்கள் ஃபான்குவான் ( ரசிகர் வட்டங்கள்) என்று குறிப்பிப்படுகின்றன. இந்த வட்டங்கள் உணர்ச்சிவசப்பட்ட, விசுவாசமான ரசிகர்களின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களாக அமைந்திருக்கின்றன. அவர்களின் ஹீரோக்களாக பெரும்பாலும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நடிகர்கள் அல்லது பொப் இசைக்கலைஞர்களே இருக்கிறார்கள். இந்த ஹீரோக்களை சாத்தியமானளவு பிரபலமானவர்களாக்குவதற்கு ரசிகர் வட்டங்கள் சுயமாக தமது விருப்பத்தின்பேரில் தங்களது நேரத்தையும் பணத்தையும் அறிவையும் செலவிடுகின்றன.

ரசிகர் வட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களாகவே (Generation Zers) இருக்கிறார்கள்.அவர்களின் எண்ணிக்கை அண்மைய வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் சீனாவின் மிகவும் இளவயது நெற்றிசன்கள் 18 கோடி 30 இலட்சம் பேரில் சுமார் 8 சதவீதத்தினர் தங்களது ஹீரோக்களின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சீன இணைய வலைப்பின்னல் தகவல் நிலையத்தினால் (China Internet Network Information Center) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இணையவெளியில் கொச்சைத்தனமான விடயங்களை பதிவேற்றம் செய்தல், வதந்திகளைப் பரப்புதல், குறிப்பிட்ட ஆட்களை இலக்கு வைத்து இணையவெளியில் பதிவுகளைச் செய்தல் உட்பட அதிகரித்து வரும் ரசிகர் வட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இலக்கு வைத்து இரு மாத கால நடவடிக்கைகளை சீனாவின் இணையவெளி கண்காணிப்பு அமைப்பான சீன இணையவெளி நிருவாகம் (Cyberspace Administration of China) ஜூனில் தொடங்கியது.

18 வயதுக்கு குறைந்தவர்களை அவர்களது ஹீரோக்களுக்கு வாக்களிக்க தூண்டும் செயற்பாடுகளுக்கும் ஹீரோக்களை ஆதரிக்க பெருமளவு பணத்தை திரட்டி செலவுசெய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணையவெளி கண்காணிப்பு நிருவாகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வர்த்தக நோக்கங்களுக்காக ரசிகர்களிடமிருந்து பணத்தை திரட்டக் கூடாது என்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீன ஆற்றுகை கலைகள் சங்கம் (China Association of Performing Arts) அறிவுறுத்தல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பதின் அகவை (Teenage)ரசிகர்களின் மனநலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சீனாவின் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஷெங் நிங் கூறினார்." நாம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.வாழ்வின் கனிவை அவர்கள் இப்போதே உணரக் கூடியதாக உளவியல் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

"நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதும் ஒழுங்கு கட்டுப்பாடுடையதுமான ரசிகர் வட்டங்கள் கடந்த வருடம் கொவிட் 19 பெருந்தொற்று பரவிய பிறகு அதற்கு எதிராக வூஹான் நகரம் நடத்திய போராட்டத்தில் பெருமளவு பங்களிப்பைச் செய்தன. பண நன்கொடைகளையும் மருத்துவ விநியோகங்களையும் அந்த ரசிகர் வட்டங்கள் செய்தன. அந்த வட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்கும்".

(சின்ஹுவா)


Add new comment

Or log in with...