கல்முனை பிராந்தியத்திற்கு மேலும் 01 இலட்சத்தி 40 ஆயிரம் தடுப்பூசிகள்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் மேலும் ஒரு தொகுதி, 01 இலட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசி கிடைக்கப்பெறவுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 75 ஆயிரம் தடுப்பூசியும், இரண்டாம் கட்டமாக 65 ஆயிரம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கப் பெறவுள்ளதாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும், 07 ஆதார வைத்தியசாலைகளிலும், 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் விசேட மையங்களிலும் சைனோபாம் தடுப்பூசி பொது மக்களுக்கு இன்று வியாழக்கிழமை (29) முதல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத் தடுப்பூசிகள் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

விசேட மையங்களில் அரச முன்னிலை உத்தியோகத்தர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணித் தாய்மார்கள், பொது மக்கள் மற்றும் பலூட்டும் தாய்மார்களுக்கும் இத் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி வழங்கப்படும் மையங்களுக்குச் சென்று முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும், இது தொடர்பாக மேலதிக தகவல் தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவித்துள்ளார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாபாளர் பிரிவிற்கு முதற்கட்டமாக 50 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

(ஒலுவில் விசேட நிருபர்)

 

Add new comment

Or log in with...