16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணம்: தொடர்புடைய சகலருக்கும் தண்டனை வழங்க வேண்டும்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை

ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்காமல் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்ன? உங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரிஷாத் பதியுதீனை உடனடியாக இடை நீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

ஹிஷாலினியின் மரணத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டணை வழங்க வேண்டும். அத்துடன், தமது மகளை வேலைக்கு அனுப்பிய ஹிஷாலினியின் பெற்றோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இது ஏனைய பெற்றோருக்கும் சிறந்த பாடமாக அமையும் என கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இந்நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம்,நீதி காணப்பட வேண்டும். சிங்களவர், தமிழர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என சட்டங்கள் வேறுபட்டிருக்க முடியாது. இதில் முஸ்லிம்களுக்கென்று ஏன் தனியாக காதி நீதிமன்றம் என்றொன்று இருக்க வேண்டும். அனைவரும் இலங்கை நாட்டு பிர‍ஜைகள் என்ற அடிப்படையில் சகலருக்கும் ஒரே சட்டம் காணப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களில் புர்கா ,நிகாப் ஆகிய உடைகளை அணிந்து நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். எனினும், பலர் புர்கா மற்றும் ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணிந்து போதைப்பொருள்களை கடத்துகின்றனர் என்றார்.

சிறுமி ஹிஷாலினி ரிஷாட்டின் உறவினர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஈடுபட்டுள்ளார், அதேபோன்று ரிஷாத்தின் இல்லத்தில் முன்னர் பணிபுரிந்த 11 பெண்களில் சிலரும் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவரது மனைவி, மாமா, மைத்துனர் என இதனுடன் தொடர்புப்பட்ட அனைவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிஷாத்தின் இல்லத்துக்கு முன்பாக எமது கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. தற்போது மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் ஹிஷாலினிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றமை பெருமையாக இருக்கிறது.

ஹிஷாலியின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்காமல் மெளனமாக இருந்து வருகிறார். உங்கள் கூட்டணியில் அங்கம்வகிக்கும் ரிஷாத் பதியுதீனை உடனடியாக இடை நீக்கம் செய்யுங்கள். நீங்கள் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்ற கனவுக்காக இருக்காமல், அவரை உடனடியாக உங்களது கூட்டணியிலிருந்து இடைநிறுத்துங்கள்.

சிறுமி ஹிஷாலியின் மரணத்தில் தொடர்புபட்ட அனைவருக்கும் தகுந்த தண்டயை வழங்க வேண்டும். அத்துடன், தமது மகளை வேலைக்கு அனுப்பிய ஹிஷாலியின் பெற்றோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். இது ஏனைய பெற்றோருக்கும் சிறந்த பாடமாக அமையும்" என்றார்.

 


Add new comment

Or log in with...