307 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி

258 ஆமைகள், 43 டொல்பின்கள்,06 திமிங்கலங்கள்

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட கடல் பேரழிவைத் தொடர்ந்து இதுவரை மொத்தம் 307 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.

அதன்படி 258 ஆமைகள், 43 டொல்பின்கள் மற்றும் ஆறு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை நேரடியாக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கவுள்ளது.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களின் (Necroscopy) இறந்த உடல்களின் ஆய்வு தொடர்பிலான உறுதிப்படுத்துதில் உள்ளூர் அதிகாரிகள் தாமதங்களை ஏற்படுத்துகின்றனரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தீக்காயங்கள், இரசாயனங்கள் வெளிப்படுவதால் ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததாக ஜூன் 17 அன்று நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடல் விலங்குகள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் ஏன்பதால் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் தெரிவித்திருந்தார்.

மே 24 அன்று விபத்துக்குள்ளான கப்பலில் சுமார் 25 மெற்றிக் தொன் நைட்ரிக் அமிலம், 300 மெற்றிக் தொன் எரிநெய், 78 மெற்றிக் தொன் கரிமப் பொருட்கள் அல்லது உயிர்வளத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் உயிர்வளத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருள்கள் நாட்டின் கடல் சூழலை, பல ஆண்டுகளாக பாதிக்கக்கூடுமென சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Add new comment

Or log in with...