நோர்வேயும் எரிக்சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ரோஹித்த போகொல்லாகம சாட்சியம்

அமைதிப் பேச்சுவார்த்தையின் போது சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த போதும் நோர்வேயினதும் எரிக் சொல்ஹெய்மினதும் செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிரானதாகவுமே அமைந்திருந்தன என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்ற போர்வையில் தனியானதொரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அவர்கள் செயற்பட்டனர்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவர், கடந்த யுத்த காலங்களின் போதும் அதன் பின்னரும் அரசாங்கம் திறந்த மனப்பான்மையுடன் வெளிப்படையாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் தொடர்ந்தும் அதே வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் திடமாக செயற்பட்டு வருவதாகவும் பயங்கரவாதம் யுத்தம் என நாடுகடந்து வந்துள்ள நிலையில் தற்போது சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

கடந்தகால ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பான பரிந்துரை மற்றும் எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது ரோஹித்த போகொல்லாகம இதனைத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.எம். எச். டீ. நவாஸ் தலைமையிலான மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் ரோஹித்த போகொல்லாகம சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்:

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதனைத் தொடர்ந்து நல்லிணக்க செயற்பாடுகளின் போதும் அரசாங்கம் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் வெளிப்படையாகச் செயற்பட்டு வருகிறது.

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் செயற்டுத்தப்பட்டு வருகின்றன.

யுத்தநிறுத்த ஒப்பந்த காலங்களில் பல்வேறு நாடுகள் புலிகளுக்கு வாகனங்களை வழங்கியிருந்தன. அந்த வாகனங்களை புலிகள் இராணுவத்தினரின் வாகனங்களைப் போல் தயார் செய்து அதன்மூலம் அரசாங்கத்தின் மீது சர்வதேசம் குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் செயற்பட்டனர்.

மனித உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில் யுத்த காலங்களில் மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்கள் எந்தவித குற்றச்சாட்டையும் அரசாங்கத்தின் மீது சுமத்தியிருக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும். அந்த வகையில் மனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு இது சிறந்த சான்றாகும் என்றும் ரோஹித்த போகொல்லாகம மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 


Add new comment

Or log in with...