வைரஸ் பரவலின் மோசமான நிலைக்கு ஆசிரியர்கள் காரணம்

போராட்டத்தை காரணம் காட்டுகிறது PHI சங்கம்

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் ஆசிரியர்களின் போராட்டம் அவர்களின் உயிர்களுக்கு பாதிப்பாகுமென பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. அதே போன்று தற்போதைய இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலினால் நாடு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுமென்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் எந்தளவு நீதியானதாக இருந்தாலும் கொரோனா வைரஸிற்கு அது தொடர்பில் எந்த கவனமும் கிடையாதென்றும் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் நாம் கேட்டுக் கொள்வது, உங்கள் கோரிக்கைகள் எந்தளவு நியாயமானதாக இருந்தாலும் கொரோனா வைரஸ் அது தொடர்பில் உணராது. அதனால் கொரோனா வைரஸ் உங்கள் உயிர்களை பறிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்ட செயற்பாடுகளோடு அடிமட்ட மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் குறைந்து காணப்படுகின்றது. நாட்டு மக்கள் மோசமான முன்மாதிரியை கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது.

ஆசிரியர்கள் நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியுமானால் தாம் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதிலுள்ள பாதிப்பு என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனரென்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...