அதிபர், ஆசிரியர்கள் சம்பள பிரச்சினைக்கு திங்கள் தீர்வு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவிப்பு

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (27) அலரி மாளிகையில் தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நான் தெளிவான புரிதலை கொண்டுள்ளேன். சம்பள முரண்பாட்டை குறைப்பது அவசியம் என்பதை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தார். அமைச்சரவையில் நான் அதிபர், ஆசிரியர்களுக்காக முன்நிற்பேன். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

எனினும் சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...