பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு அங்குரார்ப்பணம்

பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு அங்குரார்ப்பணம்-Greater Matale Water Project Hand over to People

இலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டமான, பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டமானது இன்று (28) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மக்கள் பாவனைக்காக அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது.

இக்கருத்திட்டத்திக்கு முப்பத்தோராயிரம் (31,000) மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.  பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக சுத்தமான குடிநீர் இணைப்புகள் 90,000 வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இத்திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் (350,000) குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்த மாத்தளை, ரத்தோட்ட, யடவத்த, உக்குவெல, பல்லேபொல, அம்பன்கங்க மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். இன்றைய தினம் மூன்று நீர் வழங்கல் கருத்திட்டங்கள் பொதுமக்களுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. 

மில்லியன் 5,440 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அம்பன்கங நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அண்ணளவாக 20,000 குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் சுத்தமான குடிநீரை 76,740 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. பெறவுள்ளன. பல்லேபொல, யடவத்த , நாவுல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் உள்ள 115 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். அவ்வாறே ரஜ்ஜம்மன, வல்மோறுவ, மஹவலகந்த ஆகிய பிரதேசங்களில் அதிக கொள்ளளவினைக் கொண்ட மூன்று (03) நீர் தாங்கிகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 18,000 கனமீற்றர் சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீரினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உக்குவெல நீர் வழங்கல் திட்டமானது பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ளடங்கிய மற்றொரு நீர் வழங்கல் திட்டமாகும். மில்லியன் 3,150 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அண்ணளவாக 8,000 குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் சுத்தமான குடிநீர் 31,908 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. உக்குவெல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். 

அவ்வாறே பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு நீர் வழங்கல் திட்டம் உடத்தென்ன நீர் வழங்கல் திட்டமாகும்.

 இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் 47,918 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 12,000 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. உக்குவெல மற்றும் ரத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 37 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. உடத்தென்ன மற்றும் பன்சல் தென்ன ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் கனமீற்றர் 1,090 மற்றும் கனமீற்றர் 800 கொள்ளளவினை நீர் தாங்கிகள் மூலம் இப்பிரதேசங்களில் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக 3,250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாரிய மாத்தளை நீர் வழங்கல் கருத்திட்டமானது நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் முயற்சியால் இன்று பூரணப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த நீர் வழங்கல் திட்டமானது முற்றாக நிறைவு பெருமிடத்து மாத்தளை மாவட்டத்தின் குழாய் வழியில் தற்போது 30% வழங்கப்படும் குடிநீர் 90%நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்பட்டதாக அமையும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் லக்கல, வில்கமுவ நீர் வழங்கல் கருத்திட்டத்தின் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்வருட இறுதியில் இக்கருத்திட்டங்களும் மக்கள் பாவனைக்காக கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

(பர்வீன்)


Add new comment

Or log in with...