பெண்ணை போகப்பொருளாக வர்ணிப்பது பெண்ணின் பெருமைக்கு உரியதாகாது

நளவெண்பா புகழேந்தி எனும் புலவரால் இயற்றப்பட்ட சிறந்த படைப்பிலக்கியம். இந்த கதையில் வரும் நளதமயந்தி கதாபாத்திரங்கள் மகாபாரதத்தில் கிளைக்கதையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சூதிலே நளன் தனது நாட்டை இழந்ததுபோல தருமர் நாட்டை இழந்தான். அங்கே தமயந்தி அபலையானாள். மகாபாரதத்தில் திரெளபதி அபலையாக்கப்பட்டாள். இரண்டையும் நிகழ்த்தியவர்கள் ஆண்கள். ஆனால் துயரறுவடை செய்பவர்கள் பெண்கள்.

நளவெண்பாவை பொறுத்தவரையில் பெண்ணை உயர்வாகத்தான் காட்டியிருப்பதுபோல ஒரு மாயை தோன்றும். அதாவது பெண்ணை போகப்பொருளாக வர்ணிப்பது. இது பெண்ணின் பெருமைக்கு உரியதாகாது. ஆண்,பெண்ணுக்கான ஈர்ப்பு இருபாலாரிடத்திலும் உண்டு. இந்த கதையில் தமயந்தி சுயம்வரத்தின் மூலம் தனது கணவனை தானே தேர்ந்து கொள்கின்றாள்.

அதாவது அன்னம் ஒன்று நளனுக்கும் தமயந்திக்கும் இடையில் தூதாக செல்ல முகம்காணமலே இருவரும் காதல் கொள்கின்றனர். சுயம்வரம் நடக்கையில் தேவர்கள்

அனைவரும் நளனை போலவே உருவெடுத்து வந்திருந்தும் தமயந்தியின் காதலுக்கு நளனைமட்டும் அடையாளம் காணும் வல்லமை இருந்தது. அதனால் அவள் அவனை தேர்ந்துகொண்டாள்.சுயம்வரம் வைத்து பெண் தனது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்துள்ளமையால் இது அவளை முன்னிலைப்படுத்துவதாகவே தோன்றும்.

மகாபாரதக் கதையின்படி தனக்கு இன்னவரே கணவனாக வரவேண்டும் என சுட்டிக் காட்டி கட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தாள் பீஷ்மரின் தாய். பெண்ணிற்கு அவ்வாறு முதன்மையளித்த சமூகம் பின்னாளில் சுயம்வரத்திற்கு ஆண்களை அழைத்து அதில் உள்ளவர்களில் ஒருவரை பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே பெண்ணிற்குத் தந்தது பிந்தைய‌ சமூகம். பார்வைக்கு இது பெரியதாய் தோன்றும். ஆனால் இது பெண் உரிமையை மட்டுப்படுத்துகின்றது.

தமயந்தியின் காலம் இப்படியிருந்தது. ஆனாலும் அவள் முன்னமே காதல் கொண்டிருந்ததனால் அவளது சுயம்வரம் அவளுக்கு ஏதுவாக அமைந்திருந்தது. அதுவும் நளன் ஒரு மகாராஜனாக இருந்தமையால் என்பது கவனிக்கத்தக்கது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் கவனிப்போம். மகாபாரத்த்தில் சுயம்வரம் நடத்திய மூன்று சகோதரிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்களை மணக்க முடியாமல் தடுத்து பீஷ்மர் கடத்திவந்து தன் சகோதரனுக்குக் கட்டி வைத்தார். அவளே பின்னாளில் சிகண்டியாக பீஷ்மரின் உயிர் பறித்தாள். அதுதான் பெண்ணின் வீரம். பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்ட பிந்தைய சமூகத்தைச் சேர்ந்தவள் பாஞ்சாலி. அதில் அவள் போட்டியில் வென்றவனுக்குக் கொடுக்கப்பட்டு, ஐந்தாகப் பங்கு போடப்பட்ட ஒரு பந்தயப் பொருள்.

ஆனால் நளதமயந்தியில் நளனைவிட்டு பிரிந்து தனியிடத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்து, பின்னர் நளன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவனை மீளவும் கைப்பிடிக்க தமயந்தி இரண்டாவது சுயம்வரத்திற்கு அறிவித்து அவனை கண்டடைகின்றாள். இதுவே அவளது சாதுரியம். அந்த புத்திகூர்மையை யாரும் சிலாகிப்பதில்லை.

பெண்ணின் கை தீண்டலுக்கு பணியாதவர் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார் நளவெண்பா எழுதிய புகழேந்தி. நளனும் தமயந்தியும் தேரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். வரும் வழியில் உள்ள சோலைகளில், பெண்கள் பூ பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கிளையின் மேலே உள்ள பூக்களைப் பறிக்க அவர்கள் அந்த கொம்பை சற்றே இழுத்து வளைக்கிறார்கள். அதை கண்ட புலவனின் மனதில் கற்பனை பிறக்கிறது.

பெண்களின் கை பட்டதால், அந்த மரமே தாழ்ந்து அவர்களின் காலில் விழுந்த மாதிரி இருந்தது என்கிறான். பெண்ணின் கை பட்டால் யார் தான் பணிய மாட்டார்கள், இந்த பூ மரம் மட்டும் என்ன விதி விலக்கா என்று கேட்கிறான். இது மென்மையான ஒரு காதல் பார்வையில் பெண்ணை அணுகும் செயல். இவற்றை களைந்து பெண்ணை பெண்ணின் தனித்த திறமைகளுக்காய் பாராட்டவும் ஆண் இல்லாமல் பெண் இருக்கமுடியாது என்ற கூற்றை களைந்தும் காவியம் பிறக்குமெனில் அதுவே பெண்ணிற்கு பெருமைதரும்.

பெண்ணின் தனித்த திறமைகளுக்காய் பாராட்டவும் ஆண் இல்லாமல் பெண் இருக்கமுடியாது என்ற கூற்றை களைந்தும் காவியம் பிறக்குமெனில் அதுவே பெண்ணிற்கு பெருமைதரும்

பவதாரணி ராஜசிங்கம்

 


Add new comment

Or log in with...