மனமுவந்து பகிர்தலில் கிடைக்கும் ஆசீர்வாதம் ஆண்டவர் தரும் உணவு குறைவில்லாதது

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை சமூகவியலாளர் முன்மொழிகின்றனர். இவற்றில் 'உணவுத் தேவை' இரண்டு நிலைகளில் மற்றவற்றை விட தனித்து நிற்கிறது.

ஒன்று, உணவு மட்டும்தான் நம் தேவைக்கு மேல் நம்மால் எடுத்துக்கொள்ள இயலாது. எடுத்துக்காட்டாக மூன்று அல்லது நான்கு தோசை சாப்பிட்டவுடன் வயிறு'போதும்!' என்று சொல்லிவிடும். அதற்கு மேல் நாம் எவ்வளவு விரும்பினாலும் ருசித்தாலும் வயிறு அதை ஏற்காது. ஆனால் உடையும் இருப்பிடமும் நம் தேவைக்கு மேலும் நம்மால் வைத்துக்கொள்ள இயலும்.

இரண்டு, உணவு என்னும் தேவையில்தான் நாம் மற்ற எல்லா உயிரினங்களோடும் இணைந்திருக்கின்றோம். எல்லா உயிரினங்களுக்கும் உணவுத் தேவை இருப்பது போல நமக்கும் இருக்கிறது. பசி என்னும் உணர்வு நம்மை அனைத்து உயிரினங்களிலும் நாமும் ஒருவர் என்ற உணர்வைத் தருகின்றது.

எதிர்வரும் ஐந்து வாரங்களுக்கு, 'வாழ்வுதரும் உணவு' என்னும் சொல்லாட்சியில் சுழல்கின்றன நற்செய்தி வாசகங்கள்.

ஒருவர் மற்றவருக்கு ஊட்டம் தருவது அல்லது உணவு தருவது என்பதே இயேசுவின் உரையின் மையமாக இருக்கிறது. அந்தப் பேருரையை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைகிறது கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகம்.

ஞாயிறு முதல் வாசகம் (2 அர 4:42-44) மிகச் சிறிய ஆனால் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலிசாவிடம் விளங்கிய வல்ல செயல் நிகழ்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு விவசாயி புது தானியத்தில் செய்யப்பட்ட வாற்கோதுமை அப்பங்களையும் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வருகின்றார். 'பாகால் சாலிசா' என்ற பெயரிலிருந்து எலியாவின் காலத்திற்குப் பின்னரும் பாகால் வழிபாடு இஸ்ரயேலில் இருந்தது என்பதை நாம் உணர முடிகின்றது. விளைச்சலின் முதற்கனிகளைக் கடவுளுக்குப் படைக்கும் நோக்கில் அந்த நபர் அவற்றை வழிபாட்டுத்தலத்திற்குக் கொண்டு வருகின்றார். வழக்கமாக அப்படிக் கொண்டுவரப்படும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அங்கே பணியாற்றுகின்ற குருக்கள் மற்றும் இறைவாக்கினர்களால் பகிர்ந்துகொள்ளப்படும்.

முதற்கனிகளை அந்த நபரிடமிருந்து பெறுகின்ற எலிசா அவற்றை கடவுளின் முன் வைக்காமல் அங்கிருந்த மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்குமாறு பணிக்கின்றார். ஒரு வேளை, 'பாகால்' நாட்டிலிருந்து வந்ததால் அதை இஸ்ரயேலின் கடவுளுக்குப் படைக்காமல் இருந்திருக்கலாம் எலிசா.

கடவுளுக்கு மட்டுமே உரித்தான பொருளை எடுத்து மனிதர்களுக்குக் கொடுப்பது அங்கிருந்தவர்களுக்குப் பெரிய இடறலாக இருந்திருக்கும். ஆகையால்தான், அங்கிருந்த பணியாளனும், 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?' என்று தயக்கம் காட்டுகின்றார்.

இருந்தாலும் எலிசா அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு பணிக்கின்றார். மக்கள் அனைவரும் உண்கின்றனர். மீதியும் இருக்கின்றது.

இது எலிசாவின் சொற்களால் அல்ல. மாறாக, ஆண்டவரின் வாக்கின்படியே நிறைவேறுகின்றது. ஆண்டவருடைய வாக்கை எலிசா செயல்படுத்துகின்றார். 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் சொன்னதை அப்படியே சொல்கின்றார் எலிசா. ஆண்டவரின் வாக்கின்படியே நிகழ்கின்றது. கடவுளின் இல்லத்தில் கூடியிருந்தவர்களின் பசியே கடவுளுக்கு முதன்மையானதாகத் தெரிகிறதே தவிர அங்கு வழக்கத்தில் இருந்த வழிபாட்டு முறைமைகள் அல்ல.

இரண்டாம் வாசகத்தில் (எபே 4:1-6), 'ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்' என எபேசு நகரத் திருஅவையை இறைஞ்சுகின்றார் பவுல். சிறையிலிருந்தாலும் எபேசு நகரத் திருஅவையினர் மதிப்பீடுகளில் வளர வேண்டும் என விரும்பும் பவுல் ஐந்து மதிப்பீடுகளைக் குறிப்பிடுகின்றார்: 'தாழ்ச்சி' – அதாவது, ஒருவர் மற்றவர் மேல் அதிகாரம் செலுத்தாமலும் பயமுறுத்தாமலும் இருப்பது. 'கனிவு' – தேவையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொள்வது. 'பொறுமை' மற்றும் 'அமைதி' – பிரிவுகளும் பிளவுகளும் ஏற்படாத வண்ணம் நடந்துகொள்வது. மற்றும் 'அன்பு' - இதன் வழியாக ஒருவர் மற்றவரைத் தாங்க வேண்டும். இந்த ஐந்து மதிப்பீடுகள் ஒரு குழுமத்திற்கான உணவு அல்லது ஊட்டமாக இருக்கின்றன.

நற்செய்தி வாசகம் நமக்கு மிகவும் அறிமுகமான வாசகம். இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர்.

முதல் ஏற்பாட்டு எலிசா போல இயேசு இந்த வல்ல செயலை நிகழ்த்தினாலும் அங்கே எலிசா ஆண்டவருடைய பெயரால் வல்ல செயலை நடத்துகின்றார். ஆனால், இயேசுவோ தானே இச்செயலை நிகழ்த்துகின்றார்.

முதல் ஏற்பாட்டின் பின்புலத்தில் இந்நிகழ்வு இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

ஒன்று, பாலைநிலத்தில் பசியால் வாடிய மக்களுக்கு மன்னாவை ஆண்டவராகிய கடவுள் வழங்கியது போல இங்கே இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டத்திற்கு உணவு தருகின்றார். இரண்டு, இந்த நிகழ்வு நற்கருணையையும் நற்கருணைக் கொண்டாட்டத்தையும் நினைவுபடுத்துகின்றது. ஏனெனில், இந்த நிகழ்வின்படி, மக்கள் பசியாக இருப்பதாக இங்கே எந்தப் பதிவும் இல்லை. மேலும், 'எங்களுக்கு உணவு தாரும்' என்று யாரும் இயேசுவைக் கேட்கவும் இல்லை. இயேசுவே முன்வந்து. 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?' என்று பிலிப்பிடம் கேட்கின்றார்.

மேலும், 'பாஸ்கா விழா அண்மையில் இருந்தது' என்னும் வாக்கியம், நற்கருணையின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது. ஏனெனில், ஒத்தமைவு நற்செய்தியாளர்களின் பதிவின்படி, இயேசு பாஸ்கா விழாவின்போதுதான் நற்கருணையை ஏற்படுத்துகின்றார். மேலும், யோவான் நற்செய்தியில் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வு இல்லை. ஆனால் இங்கே, அதே நிகழ்வில் உள்ள வினைச்சொற்களை இயேசு பயன்படுத்துவதாக யோவான் பதிவு செய்கின்றார்:

'அப்பங்களை எடுத்து,' 'கடவுளுக்கு நன்றி செலுத்தி,' 'அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.'

மக்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே!' (காண். இச 18:15) என்று இறைவாக்கின் நிறைவாக இயேசுவைப் பார்க்கின்றனர்.

தொடர்ந்து அவரை அரசராக்க முயற்சி செய்கின்றனர். இயேசு அங்கிருந்து தனியாக மலைக்குச் செல்கின்றார். இயேசுவின் நோக்கம் மக்களின் வயிற்றுப் பசி நிறைவது அல்ல.

முதல் வாசகத்தில் யாரும் கேட்காமலேயே எலிசா மக்கள் கூட்டத்திற்கு உணவு வழங்க முன் வருகின்றார். இரண்டாம் வாசகத்தில், குழுமத்திற்கான ஊட்டம் என்னும் மதிப்பீடுகளைப் பவுல் வழங்குகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களின் வயிற்றை நிரப்பி, அதிலிருந்து வயிற்றையும் தாண்டிய உணவு பற்றிப் பேசுவதற்கான தளத்தை உருவாக்குகின்றார்.

இந்த இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?

இறைவன்தாமே உணவு வழங்க முன்வருகின்றார். பசியாற்றுதல் இறைவன் செயல் என்றால் நாம் ஒருவர் மற்றவரின் பசியாற்றும்போது அதே இறை பண்பை நம்மில் வெளிப்படுத்துகின்றோம்.

கடவுள் தரும் உணவு குறைவின்றி இருக்கிறது. எலிசாவின் பணியாளர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர். இயேசுவின் சீடர்களும் எஞ்சிய உணவைச் சேகரிக்கின்றனர்.

எலிசாவின் பணியாளர்போல அல்லது பிலிப்பு போல, சில நேரங்களில், 'இது எப்படி?' என்று தயக்கம் காட்டுகின்றோம். மனிதக் கணக்கை விட இறைவனின் மனக் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது.

யேசு கருணாநிதி


Add new comment

Or log in with...