மலையகத் தமிழ் சமுதாயத்தின் மாற்ற முடியாத துயர வரலாறு

1970களின் பிற்பகுதி அது...அது அவனுடைய சிறுவயதுக் காலம். தபால் அதிபரான தனது தகப்பனார் பணியாற்றும் பதுளை, ஹாலி-எல தபால் அலுவலகத்தின் உத்தியோகத்தர் விடுதியில் ஆசிரியரான அம்மா மற்றும் சகோதரியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த காலம்.

பதுளை, ஹாலி-எல மட்டுமல்ல, அவனது தகப்பனார் தபால் அதிபராக பணியாற்றிய கிளிநொச்சி-பூநகரி, முல்லைத்தீவு போன்ற இடங்களிலும் பதுளைக்குப் போக முன்னர் சிறு குழந்தையாக அப்பா, அம்மாவுடன் வசித்தவன் அவன்.

இப்போது போல் யாழ்ப்பாணத்தை விட்டு ஓரிடமும் இடமாற்றம் பெற்றுச் செல்ல மாட்டோம் என்று அரச உத்தியோகத்தர்கள் அடம் பிடிக்கும் காலம் அல்ல அது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் மாகாணசபைகளும் தோற்றுவிக்கப்படாத காலம் என்பதால், இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்று பணியாற்றுவதற்கு அரச உத்தியோகத்தர்கள் தயாராக இருந்த காலம்.

இதனாலேயே, கிளிநொச்சி-பூநகரியில் தவழ்ந்து, முல்லைத்தீவில் அரிவரி படித்து, பதுளை, ஹாலி-எலவில் 5ம் வகுப்பு வரை சிங்கள மற்றும் மலையக சமூகத்தினருடன் வாழும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது.

ஆனால், இவ்வாறு பல பிரதேசங்களிலும் வசித்தாலும், பாடசாலை விடுமுறைக் காலம் என்றால் அவனுக்கும், சகோதரிக்கும் ஒரே குதூகலம். விடுமுறையைக் கழிக்க ரயில் வண்டியில் யாழ்ப்பாணம் போகும் மகிழ்ச்சி அது.

பதுளை, ஹாலி-எல ரயில் நிலையத்தில் இரவு ரயிலில் பயணம் ஆரம்பிக்கும். அதிகாலை 4 மணியளவில் பொல்காவல ரயில் நிலையத்தை அது அடைந்ததும், இறங்கி அங்கு காவல் இருந்து மீண்டும் காலை 7 மணியளவில் வரும் யாழ்தேவியில் முண்டியடித்து ஏறி யாழ்ப்பாணம் பயணமாவது வழக்கம். வழமைக்கு மாறாக ஒரு முறை பகல் வேளையில் அப்பா ரயில் பயண ஒழுங்கைச் செய்திருந்தார். குடும்பமாக எல்லோரும் புறப்பட்டு ரயில் நிலையம் சென்று பயணத்தை ஆரம்பித்தாயிற்று. எப்போதும் போல் சகோதரியுடன் யன்னலோரம் மலைகளின் அழகை இரசித்தபடி குதூகலமாக பயணம் போய்க் கொண்டிருந்தது.

இடையில் ஒரு ரயில் நிலையம். மலையகப் பகுதிகளில் ஒன்றான தலவாக்கலை, கொட்டகல அல்லது ஹட்டனாக இருந்திருக்கலாம். அந்த ரயில் நிலையங்களில் ரயில் நின்று புறப்படும் போது பல இந்திய வம்சாவளி மக்களான ஆண்களும், பெண்களும் தலையிலும், வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுதபடி தமது உறவினர்களைப் பயணம் அனுப்பி வைத்தனர்.

ஒவ்வொரு முறையும் யாழ்ப்பாணம் போய் விட்டு மீண்டும் பதுளைக்குத் திரும்பும் போது, யாழ்ப்பாணத்திலுள்ள உறவுகளைப் பிரிகிறோமே என்ற கவலையை அனுபவித்துப் பழக்கப்பட்ட அவனுக்கு, ரயில் நிலையத்தில் ஒப்பாரி வைத்தவர்களும் இவ்வாறுதான் ஒரு சிறிய பயணப் பிரிவுத் துயருக்கே அழுகிறார்கள் என்று தன் சிறிய மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

1990 காலப் பகுதி அது...

பூநகரியில் தவழ்ந்து, முல்லைத்தீவில் அரிவரி படித்து, பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் 5ம் வகுப்பு வரை படித்த அவனை, 6ம் வகுப்புடன் தகப்பனார் யாழ்ப்பாணம் அழைத்துவந்து யாழ் இந்துக் கல்லூரியில் சேர்த்து, அவனது பெரியம்மாவின் வீட்டில் சகோதரியுடன் தங்க வைத்து விட்டார்.

1983 இனக்கலவரத்தில் தகப்பனாரும், தாயாரும் சிக்குண்டு சிரமப்பட்டு யாழ்ப்பாணம் வந்த பின்னர், தகப்பனாருக்கும் சாவகச்சேரி தபால் நிலையத்துக்கு இடமாற்றம் கிடைத்தது. 1989ம் ஆண்டு வரை சாவகச்சேரி தபாலதிபராக அவர் கடமையாற்றிய காலத்தில் தபாலக விடுதியில் வாழ்க்கை கழிந்தது.

1990 இல் தகப்பனாருக்கு மீண்டும் நெடுங்கேணிக்கு இடமாற்றம். ஆனால், இம்முறை அவர் குடும்பத்தினரை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. யாழ் இந்துக் கல்லூரியில் மகனும், வேம்படி மகளிர் கல்லூரியில் மகளும் கல்வி கற்று வந்ததால் குடும்பத்தினரை யாழ்ப்பாணத்தில் விட்டு அவர் மட்டும், போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நெருக்கடி காலத்திலும் சைக்கிள் மூலம் கொம்படி பாலம் ஊடாக நெடுங்கேணி சென்று பணியாற்றி வந்தார்.

யாழ்ப்பாணத்திலேயே அம்மாவுடனும், சகோதரியுடனும் தங்கி விட்ட அவனுக்கு 1990 ஓகஸ்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சை. ஆனால், 1990 ஜுனில் பிரேமதாசா அரசுடன் புலிகள் நடத்தி வந்த பேச்சுவார்த்தை குழம்பி மீண்டும் மோதல்கள் ஆரம்பித்தன. யாழ் கோட்டையில் கடும் சண்டை. பரீட்சை பிற்போடப்பட்டது.

வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது. அதிகம் புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து வைத்த அவனுக்குக் கொண்டாட்டம். வாசித்துத் தள்ளத் தொடங்கினான். மார்க்ஸ் ஏங்கல்ஸின் மார்க்ஸிச-லெனினிஸ அடிப்படைகள், ரஷ்யப் புரட்சி-ஓர் இலக்கிய சாட்சியம், அன்னா அக்மதோவா கவிதைகள் என்ற பல புத்தகங்களின் வரிசையில், சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய ‘நாடற்றவர்களின் கதை’ என்ற புத்தகத்தையும் வாசித்தான்.

அப்போதுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, வழிவழியாக செத்து மடிந்தபடி மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் துயரம் தோய்ந்த வரலாறு அவனுக்குத் தெரியவந்தது.

இவர்களது வரலாற்றில் ஒரு கட்டத்தில் ஸ்ரீமாவோ-சாஸ்திரி உடன்படிக்கை காரணமாக ஏராளமான மலையக வம்சாவளியினர் இலங்கையிலிருந்து-தம் உறவுகளிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு பலவந்தமாக மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடயத்தை அறிந்து கொண்டான்.

தாய் இருக்கப் பிள்ளையும், பிள்ளை இருக்கத் தாயும், பேரர், பேத்திகளும் என பல வழிகளிலும் பிடுங்கியெறியப்பட்ட அந்த உறவுகள், கதறி அழ அழ, கொத்துக் கொத்தாக ரயில் மூலமும், கப்பல் மூலமும் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டான்.

அப்போதுதான், திடீரென 1970களின் பிற்பகுதியில் தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன் ரயில் நிலையங்களில் இந்திய வம்சாவளி உறவுகள் வயிற்றிலும், தலையிலும் அடித்து கதறியழுத காரணம் அவனுக்குப் புரிந்தது.

7-8 வயதில் பார்த்த காட்சியின் விளக்கம், 18 வயதில் சி.வி.வேலுப்பிள்ளையின் ‘நாடற்றவர் கதை’ மூலம் அறியக் கிடைத்த போது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரவு முழுதும் அவனால் சரியாகத் தூங்கவும் முடியவில்லை.

இடையில் சாமத்தில் எழுந்து ஏதோ சில வரிகளை தன் வலியைத் தீர்க்கும் வகையில் எழுதித் தீர்த்தான். இன்றும் அவன் நினைவுகளில் இருக்கும் அந்த வரிகள் இவைதான்.

‘ஒரு ஊதல் ஒலிக்காக
காத்திருக்கிறது புகைவண்டி...
இறுதி சமிக்ஞையும் காட்டப்பட்டதும்
அது புறப்பட்டு விடும்.
உடன் வந்து பிரிந்தவர்கள் பற்றியோ
புதிதாக பயணத்தில்
இணைந்தவர்கள் பற்றியோ
எவ்வித சலனமுமற்று
அது தன் பயணத்தைத் தொடரும்.
கடமை முடித்த திருப்தியுடன்
பனிப்போர்வைக்குள்
மூழ்கிப் போவார்
நிலைய அதிகாரி’

இலங்கையில் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் என்றால் மலையகப் பகுதியில் வசிக்கம் இந்திய வம்சாவளி மக்கள்தான் என்பது அன்று அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.

தேயிலைத் தோட்டங்களில் அரும்பாடுபட்டு உழைத்து, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் செயற்படும் அந்தச் சமூகத்தினர் லயன்களில் வாழும் தரக்குறைவான வாழ்வை சிறு வயதில் நேரில் பார்த்த நினைவுகள் அவனை வாட்டின.

ஐ.நா. சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை விட, அதே ஐ.நா.சாசனத்தில் சமவளவு முக்கியத்துவத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை சிறிதளவும் அனுபவிக்க முடியாமல் இந்திய வம்சாவளி மக்கள் படும் அவஸ்தை மோசமானது என்பதை, திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புக்காக அபிவிருத்திக் கற்கைகளைத் தொடர்ந்த போது அவன் புரிந்து கொண்டான். வெறும் கோதுமைமா ரொட்டியை உண்டபடி, பரம்பரை பரம்பரையாக போஷாக்கின்மையால் வாடும் ஒரு சமூகத்தின் கொடுமை மனிதநேய விரோதக் குற்றம் என்பதே அவனது வாதம். ஒரு சமூகம் பற்றிக் கடைப்பிடிக்கும் ‘கள்ள மெளனம்’ பாரிய குற்றம் என்று அவன் உறுதியான நம்பினான்.

2020 முதல்....

சி.வி.வேலுப்பிள்ளையின் நாடற்றவர்களின் கதை வாசித்து 30 ஆண்டுகள் கடந்து விட்டன. 1991இல் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகம் சென்று பட்டக்கல்வியைத் தொடர்ந்து, இடையில் 1995இல் இடம்பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவில் பல பகுதிகளிலும் வாழ்ந்து, மீண்டும் யாழ் திரும்பி பட்டக்கல்வியைப் பூர்த்தி செய்து, 2000ம் ஆண்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளராக பணியை ஆரம்பித்து, தொடர்ந்து கொழும்பிலும், வெளிநாடுகளிலும் ஊடகப் பயிற்சி, களப்பயணங்கள் சென்று, 2009இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் யாழ் திரும்பி 10 வருடங்களுக்கு மேலாக கல்வி-தொழில் வழிகாட்டி சேவையில் ஈடுபட்ட அனுபவத்துடன்...

2020 செப்டம்பர்-ஒக்டோபர் முதல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளராக அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புடன் பணியாற்றத் தொடங்கிய போது... சிறுவயதில் தான் வாழ்ந்த மலையகப் பகுதிகளிலிருந்து வன்முறைகள் காரணமாக இடம்பெயர்ந்து பெருந்தொகையான இந்திய வம்சாவளியினர் கிளிநொச்சியிலும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்கிறான்.

மலையாளபுரம், பொன்னகர், தொண்டைமான்நகர், கிருஷ்ணபுரம், சாந்தபுரம் என்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும், அந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தைக் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி உயர்த்தியவர்கள் ஏழ்மையில் உழன்று கொண்டிருப்பதைக் காண்கிறான்.

வந்தாரை வாழ வைத்த கிளிநொச்சி மண், இறுதி யுத்த காலத்துடன் முதுகெலும்பு முறிக்கப்பட்டு துவண்டுபோயிருக்கும் நிலையை மாற்றி, பொருளாதார ரீதியாக அந்த மாவட்டத்தை தூக்கி நிறுத்த, விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, கல்வி என பல துறைகளின் மேம்பாட்டுக்காகவும் திட்டமிட்டுச் செயலாற்றி வரும் அவன், குறிப்பாக மிகவும் வறிய நிலையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்துவதே அவர்களது வாழ்நிலையை உயர்த்தும் ஒரே வழி என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறான்.

நொந்து போயிருக்கும் அந்த சமூகத்தை ‘வடக்கத்தையான்’ என்று ஒரு தரப்பு எள்ளிநகையாட...அதை எதிர்த்து அந்தச் சமூகத்துக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இன்னுமொரு தரப்பு வாக்குவேட்டை ஆட...

அந்தச் சமூகத்தின் அடிப்படை பொருளாதார-சமூக மேம்பாட்டின் மீது உண்மையான அக்கறையோடு நேர்மையாக யாரும் கவனம் செலுத்தவில்லை என்ற உள்ளக்குமுறலுடனே பலரும் இருப்பதையும் அறிந்து கொண்டு அவர்களுக்கான சரியான வாழ்வைக் கட்டமைப்பதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்தித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

இப்படியான ஒரு காலகட்டத்திலேயே, டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் குறித்த கொடுமையான செய்தி வெளியாகி ஊடகப் பரப்பிலும், அச்சிறுமி பணியாற்றிய வீடு ரிஷாட் பதியுதீனின் வீடு என்பதால், அரசியல் பரப்பிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பருவ வயதில் எமது பெண் பிள்ளைகளை எங்கும் செல்ல விடாமல் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வரும் எங்கள் வழக்கத்துக்கு மாறாக, வறுமை காரணமாக பருவ வயதுப் பிள்ளைகள் யாரோ ஒருவருடைய வீடுகளில் வேலைக்காரர்களாக பணியாற்ற அனுப்பி வரும் மிக நீண்டகாலக் கொடுமை, ரிஷாட் பதியுதீன் வீட்டுக்குள்ளிருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ரிஷாட் வீட்டில் இடம்பெற்றதால் அரசியல்ரீதியாகப் பெறும் முக்கியத்துவம் ஒரு வகையில் இருப்பினும், இந்தப் பிரச்சினை மீதான அக்கறை அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது நல்லதே.

றுஷாங்கன் கோடீஸ்வரன்
யாழ். பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...