தாயக நினைவுகளை மனக்கண் முன்பாக கொண்டு வருகின்ற ‘ஆறாம் நிலத்திணை’

ஆசிரியர்: குரு அரவிந்தன்
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி

குரு அரவிந்தனின் எழுத்துகளில் தென்றலின் மென்மையும், புயலின் வன்மையும் கலந்து வீசுகின்றன. நகைச்சுவைச் சிற்றாறும், கோபப் பெருங்கடலும் சங்கமித்து ஓடுகின்றன. இடம், பொருள், நிகழ்ச்சி, பாதிப்பு, மனவெழுச்சி, தன்மானம் என்னும் வழித்தடங்களில் தனது தடம் மாறாது பயணிக்கிறது இவரது எழுதுகோல்.

கட்டுரையா? புதினமா? என்று வாசிப்பவர் ஐயுறும் வண்ணம் நகர்கின்றன அத்தியாயங்கள். புலம்பெயர்ந்த தமிழரொருவர், தமது தாயகத்தில் நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்து பாரம் தாங்காமல் புத்தகச் சுமைதாங்கிக் கல்லில் அதை இறக்கி வைத்திருக்கிறார். ஆறாம் நிலத்திணை என்று புத்திலக்கணம் படைக்கிறார். பனியும் பனி சார்ந்த இடமும் பனிப்புலம் என்று இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாகத் தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டினைக் கவனப்படுத்தி இருப்பது புதுமை.

தமது பிறந்தகமும் வளர்ந்தகமும், நெய்தலும் மருதமும் என்று பெருமிதமாய்ச் சொல்லிக் கொள்ளும் வேளையிலே புலம் பெயர்ந்த மக்கள் இழந்தவற்றையும், வாழ்நாளில் திரும்பவும் பெற முடியாத எத்தனையோ சுகங்கள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தாய்மண்ணின் பெருமிதங்களையும், கடந்த கால வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அடுத்த தலைமுறையினர் தெளிவாய் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காலத்தே ஆவணப்படுத்தி இருக்கிறார்.

அமைதிக்கு எதிர்வினை என்ன? என்று தன்னைத்தானே வினவிக் கொள்ளும் எழுத்தாளர், தாம் வாழ்ந்த இடத்தில் நடந்த சில விடயங்களைப் பதிவு செய்திருக்கிறார். தொல்காப்பியர், சங்க இலக்கியப் புலவர்கள், பட்டினத்தார், ஔவையார், திருவள்ளுவர், கவியரசர் கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து, முத்துக்குமாரக் கவிராயர், நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ஆகியோரின் சொற்களையும் அணைத்துக் கொண்டு இலங்கைக்கும் கனடாவுக்குமாகப் பயணம் நடக்கிறது.

சுருக்கமாக இதனைப் பிரமிள் கவிதை வரிகளில் சொல்லலாம் :

 

“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது”.

தற்காலிகப் பிரிவென நினைத்துத் தாயகம் விட்டுப் பிரிந்து அயலகத்தில் குடியேறினாலும் அது நிரந்தரம் என்று தெரிந்த போது, பள்ளிக்கூடம், கல்லூரி, நண்பர்கள், கடந்து சென்ற பெண்மயில்கள், பார்த்து ரசித்த காங்கேயன் துறை கடற்கரை மற்றும் சண்டிலிபாய் வயல்வெளிக்கரை, படமாளிகைகள், சபைசந்தி என நினைவு இறகுகள் ஒவ்வொன்றாக மீட்டெடுத்துப் புதிய சிறகில் ஒட்டி வைத்துக் கொள்ள முயலும் மனிதப் பறவையின் எழுத்து இது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரெல்லாம் ஒரு கோட்டை கூட கட்ட முடியாமல் மக்களின் எதிர்ப்பு காரணமாகப் பின்வாங்கிய சிறப்பு மிகுந்த காங்கேசன்துறை கலங்கரைவிளக்க ஒளியும், சீமெந்து தொழிற்சாலையின் சங்கொலியும், ஒலியொளிக் காட்சிகள் ஆகின்றன இவரது எழுத்தில்.

இந்நூலின் அடுத்த பகுதியாக 'கள்ளிக்காடும் கண்ணீர் நாடும்' என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளோடு, கட்டுரையைத் தொடங்கி, இலங்கையின் பண்புகளைக் கள்ளிக்காட்டு இதிகாசத்தோடு ஒப்புமைப்படுத்தி எழுதியிருக்கிறார். உலகெல்லாம் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழருமே படிக்க வேண்டிய நூல் இது.

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் மொழியில் தொடரட்டும் குருஅரவிந்தனின் எழுத்துப் பயணம். வாழ்த்துகள்.

கவிஞர் பா.தென்றல்,
தமிழ்நாடு


Add new comment

Or log in with...