தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமதம் இனியும் வேண்டாம்!

கொவிட் 19 தொற்றின் சவாலை முறியடிப்பதற்கான சிறந்த தீர்வாக இப்போதைக்கு தடுப்பூசிதான் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அதனை ஏற்று அங்கீகரித்திருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

அந்த வகையில் 2020 டிசம்பர் 08 ஆம் திகதி முதல் அவசரத் தேவையின் நிமித்தம் இத்தொற்றின் சவாலைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பிரித்தானியா ஊடாக உலகில் ஆரம்பமானது. அந்த அடிப்படையில் 2021 டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இலங்கையும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்து தயாரித்துள்ள அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இந்திய உற்பத்தியான கொவிஷீல்ட்டை அடிப்படையாகக் கொண்டுதான் இந்நாட்டில் இத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வீ, சினோபாம், பைஸர், மொடர்னா, சினோவெக் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் இங்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நாட்டில் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஊடாக எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டில் பெரும் பகுதி மக்களுக்கு இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொடுத்து செப்டம்பர் மாதம் முதல் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இத்தொற்று பரவதல் கட்டுப்பாட்டின் நிமித்தம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த ஜுலை 24 ஆம் திகதி வரையும் இந்நாட்டில் 66 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருந்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சனியன்று மாத்திரம் 04 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது இந்நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய அளவானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நாளாக விளங்குகின்றது.

இந்த நிலையில் கொவிட் 19 தொற்று பரவுதல் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, 'கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை விரைவில் நிறைவு செய்யப்படும். அதனால் இற்றை வரையும் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகிலுள்ள தடுப்பூசி வழங்கும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளதோடு, தடுப்பூசி பெற விரும்புவர்கள் கொழும்பு - 07 இலுள்ள விகாரமஹாதேவி பூங்காவிலும், பத்தரமுல்ல தியத்த உயன விலும் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி வழங்கும் மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசாங்கத்தின் இலக்கு, எதிர்பார்ப்பு எட்டப்படும் பட்சத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்படும். இதில் ஐயமில்லை. அதனால் செப்டம்பர் முதல் நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் சகல மக்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஏனெனில் இத்தொற்று தவிர்ப்புக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் போது, அதன் விளைவாக பொருளாதாரத்தின் மீது தாக்கங்களும் பாதிப்புக்களும் ஏற்படவே செய்யும். அந்நிலைமையைத் தவிர்ப்பதற்கு அமைவாகவே இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் இங்கு முன்னெடுக்கப்படுகின்றது.

இருப்பினும் நாட்டின் சில பிரதேசங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வமற்ற நிலை மக்களிடம் காணப்படுவதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக் காட்டியுள்ளார். இது முற்றிலும் தவறானது. பெரும்பாலான மக்கள் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் போது ஒரு சிலர் மாத்திரம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதிருப்பது இத்தொற்றின் பரவுதலுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.

அதன் காரணத்தினால் நாட்டினதும் மக்களதும் நலன்களை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது அரசாங்கத்தின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கு அளிக்கப்படும் பங்களிப்பாகவும் அமையும். அத்தோடு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் எதிர்பார்க்கும் இலக்கு எட்டப்படுமாயின் இத்திட்டம் நிறைவு செய்யப்படும். அதன் விளைவாக அத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதிலும் பலவித அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். அதனால் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயற்படுவதே உசிதமானது.


Add new comment

Or log in with...