உடைந்தது கால் தான் நம்பிக்கை இல்லை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.கொவிட்-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது ஒலிம்பிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கம்."எமது" இரசிகர்களுக்காக அவை தமிழில்...

சமீர் ஏய்ட் சாய்ட்

விளையாட்டு: சீருடற்பயிற்சி

நாடு: பிரான்ஸ்

வயது : 31

கடின உழைப்பு கண் முன் தகர்ந்து போனால் உடைந்து விடக்கூடாது என்பதற்குச் சான்று சமீர் ஏய்ட் சாய்ட்.

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற சமீர், பதக்கம் நிச்சயம் என்று உறுதியாகப் போட்டியில் இறங்கினார்.

2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் பல வெற்றிகளைப் பெற்ற சமீருக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாரா விதமாக சமீர் போட்டியின் போது தமது காலை உடைத்துக்கொண்டார்.

சமீரின் கால்களுடன் சேர்த்து அவரின் பதக்கக் கனவும் கண் முன் உடைந்தது. போட்டியில் இருந்து விலகினார்.

போட்டியை விளையாட்டரங்கில் பார்த்த அனைவருக்கும் இருந்த கேள்வி இனி சமீரால் நடக்க முடியுமா ?

ஆனால் சமீர் மனம் தளரவில்லை.

மருத்துவமனையிலேயே தோக்கியோ 2020-இல் சாதிப்பதுதான் இலட்சியம் என்று முடிவெடுத்தார். நடக்கத் தொடங்கியதும் பயிற்சியைத் தொடங்கினார்.

கால் உடைந்திருந்த போது சமீருக்குத் துணையாக இருந்த தந்தை சில நாள்களில் இறந்தார்.

அது சமீரை அதிகம் பாதித்தது. இருப்பினும் தமது தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.

2019ஆம் ஆண்டு நடந்த உலக சீருடற்பயிற்சி வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மூன்றாவதாக வந்தார்.

அது அவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறச் செய்தது.

இழந்த வாய்ப்பை தங்கப்பதக்கமாக மாற்றக் காத்திருக்கிறார் சமீர். அவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது விளையாட்டு உலகம்.


Add new comment

Or log in with...