இனவாத நோயினால் பீடிக்கப்படாமல் ஐக்கியத்துக்காக உழைத்த ஏ.ஆர் மன்சூர்

சேவையின் செம்மல், கல்முனையின் அபிவிருத்தி நாயகன் முன்னாள் அமைச்சர் மன்சூர் தனது அரசியல் வாழ்வில் மக்களுக்காக மறக்க முடியாத பல சேவைகளை செய்த போதிலும் ஒரு சேவைக்காவது அல்லது ஒரு பாடசாலைக் கட்டடத்திற்காவது தனது பெயரை சூட்டி அழகு பார்த்தவர் அல்ல. நமது நாட்டின் முஸ்லிம் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு மதிப்பளித்தார்.

1977 இற்குப் பின்னர் கல்முனை தொகுதியின் அரசியல் வரலாற்றை மாற்றி புதிய பாதையில் புதிய சிந்தனைகளுடன் கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தியையும் தமிழ்- முஸ்லிம் மக்களின் உறவையும் தனது இருகண்களாக மதித்துச் செயற்பட்டார். மக்கள் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் மறைந்து 2021.07.25 ஆம் திகதி நான்கு வருடங்கள் கடந்து விட்டன. அவருடன் நெருங்கி பழகியவர்களில் நானும் ஒருவன்.

மர்ஹும் ஏ.ஆர்.மன்சூரின் அரசியல் பயணமானது 1963 ஆம் ஆண்டு கல்முனை பட்டினசபை தேர்தலில் இருந்து ஆரம்பமானது. 1970களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட அவர், தேசிய அரசியலில் தடம் பதித்தார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் 5000க்கு அதிகமான மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.

1977 தொடக்கம் 1994 வரை மர்ஹும் கலாநிதி மன்சூர் அரசியலில் பெரும் விருட்சமாக ஓங்கி உயர்ந்து நின்றார். பாராளுமன்ற உறுப்பினராக, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள கப்பல் துறைமுகங்கள் மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராகவும் குவைத் நாட்டின் தூதுவராகவும் இருந்து இலங்கை வாழ் மூவின மக்களுக்கும் பணியாற்றினார்.

மன்சூர் அமைச்சராக இருந்த காலத்தில் அன்று அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்கவினால் ‘மிஸ்டர் கிளீன்’ என்று புகழாரம் சூட்டப்பட்டார். 1978 இல் வீசிய சூறாவளியினால் கல்முனை பிரதேசம் பாதிக்கப்பட்ட போது கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் அம்பாறையை வந்தடைந்து நடந்து வந்து கல்முனை தொகுதியையும் மக்களையும் கட்டியெழுப்ப பல திட்டங்களை செயற்படுத்தினார்.

கல்முனை தொகுதியை பலவழிகளிலும் அபிவிருத்தியடையச் செய்தார். கல்வி, கலாசாரம், மீன்பிடி, மின்சாரம், குழாய்நீர்த் திட்டம், கடலரிப்பு பாதுகாப்பு, மாவட்ட தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையம், நவீன சந்தைக் கட்டடம், ஊருக்கொரு பொதுநூலகம், நீதிமன்றக் கட்டடத் தொகுதி, வீட்டுத் திட்டம், அரச வங்கிகள், செயலகக் கட்டடம், பொலிஸ் நிலையக் கட்டடம், பாடசாலைகளில் ஆராதனை மண்டபங்களும், மாடிக்கட்டிடங்களும், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாணத்துக்கான தலைமைக் காரியாலயம், சலுசல, தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு 5000 பேருக்கு மேல் அரச நியமனங்கள், வீடமைப்புக் காரியாலயம், அக்பர் கிராமம் என்னும் பெயரில் மருதமுனையில் 500 வீடுகள், நற்பிட்டிமுனை மக்களுக்காக 35 வீடுகள், ஐஸ் தொழிற்சாலை போன்ற எத்தனையோ அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்தார்.

1989இல் ஜனாதிபதி பிரேமதாசா மன்சூரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்தார். ஜனசக்தித் திட்டத்தை கல்முனை தொகுதி மக்களுக்கு முதல் கட்டத்திலே கொடுத்த பெருமை மர்ஹும் மன்சூருக்கே உரியது.

கல்முனை பொதுநூலகத்தை அமைத்தார். சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களுக்கும் பொதுநூலகங்களை அமைத்துக் கொடுத்தார். பாடசாலைகளுக்கு ஆராதனை மண்டபங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், விஞ்ஞான கூடங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் பெற்றுக் கொடுத்தார்.

கல்முனை ஹிஜ்ரா வீதியில் இலங்கை வங்கிக்கு முன்னால் சதுப்பு நிலமாக இருந்த குளத்தை மண்போட்டு நிரப்பி பல கோடி ரூபா செலவில் செயலக கட்டடத் தொகுதியை அமைத்தார்.

அட்டாளைச்சேனைக்கு கல்விக் கல்லூரியை கொண்டுவந்து சேர்த்தார். பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை வரையிலான பிரதேச மக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், ஆரம்ப நீதிமன்றம் ஆகியவற்றை உருவாக்கினார். கல்முனை யாட் வீதியில் நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிறுவியவர் அவராவார்.

அவுஸ்திரேலியா, இலங்கை அரசாங்கங்களின் நிதியைக் கொண்டு சுமார் 49 கோடி ரூபா செலவில் கல்முனையில் பாரிய குழாய் நீர்த் திட்டத்தை உருவாக்கினார்.

இத்திட்டத்தின் மூலம் கல்முனை பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. கல்முனைதொகுதியின் நான்கு உப அலுவலக பிரிவுகளிலும் நான்கு அரசினர் வைத்தியசாலைகளை உருவாக்கினார்.

சம்மாந்துறையில் பாரிய செலவில் குழாய் நீர்த் திட்டம், எம்.எஸ்.காரியப்பர் பெயரில் ஆராதனை மண்டபம், பொத்துவிலில் மின்சாரத் திட்டம், நிந்தவூரில் பொதுநூலகம், அட்டாளைச்சேனையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் அவர் மேற்கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், உயர்ச்சிக்காகவும் மர்ஹும் மன்சூர் பெற்றுக் கொடுத்த கோடிக்கணக்கான நிதி உதவிக்காக தென்கிழக்கு பல்கலைக்கழக 10ஆவது பட்டமளிப்பு விழாவின் போது கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1980.11.25ஆம் திகதி ஐ.நா.சபையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு ஒடுக்கப்பட்ட கறுப்பு இன மக்களுக்காகவும் இனப்பாகுபாடுகளுக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்தார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் இனவாதமென்ற நோயினால் பீடிக்கப்படாது தன்னை தற்காத்துக் கொண்டதுடன், குறுகிய அரசியல் இலாபம் கருதி கொழுந்து விட்டெரியும் இன உணர்ச்சித் தீயில் எண்ணெய் வார்க்காது அதனை தணிக்கும் வகையில் வாழ்ந்தவர் அவர்.

இலங்கை போன்ற பல்லின மதங்களையும் கலாசாரங்களையும் கொண்ட நாட்டில் இனங்களுக்கிடையே சமத்துவமும் ஒருமைப்பாடும் இல்லாமல் யாருக்கும் விமோசனம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட அரசியல்வாதி அவர். இன்றுள்ள எமது பிரதேச அரசியல்வாதிகள் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் என்னும் அரசியல் வரலாற்று புத்தகத்தை படிக்க வேண்டியது அவசியம்.

தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர்
(கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நற்பிட்டிமுனை)


Add new comment

Or log in with...