சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது பாவச் செயல்!

உலகெங்கும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட அனைவருமே சிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் சின்னஞ்சிறார்கள் என்பதுதான் இதன் அர்த்தமாகும். இவ்வாறான பராயத்தினர் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆதரவிலேயே வாழ வேண்டியவர்களாவர். அவர்கள் சுயமாக வாழ முடியாத சிறுவர் பராயத்தினர் என்பது உலக மருத்துவ அறிவியலாளர்கள் மற்றும் சிறுவர் உளவியலாளர்களின் கருத்தாகும்.

அறிவியலாளர்களின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்தே ஐ.நாவின் சிறுவர் தொடர்பான சமவாயம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் பற்றியெல்லாம் ஐ.நாவின் சிறுவர் தொடர்பான சமவாயத்தில் மிகத் தெளிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் அப்பாவித்தனமான பருவத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய மனிதநேயம் படைத்த அனைவராலும் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.

அவ்வாறில்லாமல், சிறுவர் பருவத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குத் தீங்கிழைக்கின்ற எவரையும் மனித இனத்துக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. அத்தகையவர்கள் கருணையற்ற கொடிய விலங்குகளுக்கே ஒப்பானவர்கள். தமது சொந்தப் பிள்ளைகளைப் போலவே மற்றைய சிறார்களையும் அன்பாகப் பராமரிக்க வேண்டுமென்ற உணர்வு இல்லாதவர்களை எவ்வாறு மனித இனத்துக்குள் சேர்க்க முடியும்?

இலங்கையில் சமீப காலமாக சிறார்கள் மீதான கொடுமைகள் ஆங்காங்கே இடம்பெற்றதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. கொழும்பை அடுத்துள்ள கல்கிசையில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, செல்வந்தர்களுக்கு பணத்துக்கு விற்கப்பட்டமை மற்றும் மலையகத்தின் டயகம தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியான ஹிஷாலினி உடலெங்கும் திடீர்த் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்தமை ஆகிய இரண்டும் சமீப சில நாட்களாக நாடெங்கும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரு சம்பவங்களாகும்.

இவ்விரு சம்பவங்களிலும் சிறுமி ஹிஷாலினிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவே மனிதநேயம் மிக்கவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கின்றது. அச்சிறுமிக்கு நடந்த கொடுமைகளைக் கண்டித்தும், துரிதமாக நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் கோரியும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையிலேயே ஹிஷாலினிக்கு ஏற்பட்ட கதி வேதனை தருகின்றது.

அச்சிறுமியின் மரணத்துக்கான காரணங்கள் தொடர்பாக தொடர்ந்தும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த அச்சிறுமி பல தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை தொடர்பான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அச்சிறுமி அவ்வீட்டில் வேலைக்கு இருந்த காலப் பகுதியில் அடித்து துன்புறுத்தப்பட்டதாக அவரது தாயாரின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

அச்சிறுமி தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எவராலும் தீவைக்கப்பட்டாரா என்பதெல்லாம் இன்னுமே அறியப்படாத மர்மங்களாகும். அச்சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முழுமை பெற்று, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் உறுதிப்படுத்தும் வரை இது தொடர்பாக எந்த விதமான ஊகத்தையும் வெளியிடுவது முறையல்ல. அச்சம்பவத்தை கண்டறிய வேண்டியவர்கள் பொலிஸார் ஆவர். சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமாகும்.

இவ்வாறிருக்கையில், குற்றமிழைத்ததாக சந்தேகிக்கப்படும் தரப்பினருக்கு ஆதரவாக, அரசியல் ரீதியிலான அக்கறையின் காரணமாக கருத்துகளை எவரும் வெளியிடுவது உசிதமானதல்ல. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த விடயம் குறித்து எவரேனும் மனம் போன போக்கில் கருத்து வெளியிடுவது தவறு. இந்த விடயத்தில் தராதரம் பாராது பக்கச்சார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசார் பணிக்கப்பட்டுள்ளனர். எனவே இவ்விடயத்தில் அனைத்து தரப்பினரும் பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம்.

இவை ஒருபுறமிருக்க, மலையத்திலுள்ள வறிய சிறார்களை கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு அமர்த்தும் அவலம் இனியாவது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். சிறுமி ஹிஷாலினி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவத்தைப் பொறுத்த வரை அவ்வீட்டு எஜமானர்கள் மட்டுமன்றி, அச்சிறுமியை வேலைக்கு அனுப்பிய பெற்றோர் மற்றும் தரகர் ஆகியோரும் தவறிழைத்து உள்ளனர் என்பதே உண்மை.

குடும்ப வறுமையை காரணமாக வைத்து தங்களது சிறுவயது பிள்ளைகளை யாரோ ஒருவரது வீட்டில் வேலைக்கு அனுப்புவது சிறார்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதை சம்பந்தப்பட்ட பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அது பாவச் செயல் ஆகும். இது தொடர்பாக மலையகத்தில் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிகள் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. மலையக சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் கொடுமை நிறுத்தப்பட்டாலன்றி இந்த அவலம் முடிவுக்கு வரப் போவதில்லை.


Add new comment

Or log in with...