நவீன கல்வி முறைக்கேற்ப ஆசிரியர்களின் வாண்மை விருத்தி செய்யப்பட வேண்டும்

ஆசிரியப் பணி மகத்தான சேவையாகும். மனித குலம் என்று தோன்றியதோ அப்போதிருந்தே கற்றல் நடவடிக்கை ஆரம்பமாகி விட்டது. அதனுடன் ஆசிரியப்பணியும் தோன்றி விட்டது. முற்பட்ட காலங்களில் ஆசிரியரே கல்விக் களஞ்சியமாக கருதப்பட்டார். சமூகத்தில் அவரே ஓர் உயரிய இடத்தை வகித்தார்.

புராதன காலத்தில் கிராமத்து இயக்கத்தின் மையவிசையாக ஆசிரியரே விளங்கினார். ஆசிரியர் சோதிட விற்பன்னராகவும், ஆலோசனை கூறும் முதல்வராகவும், வைத்தியராகவும் விளங்கினார். சமூகத்தின் அதிமுக்கியமான மனிதவளமாக ஆசிரியர்கள் விளங்கினார்கள் என்று வரலாறு கூறுகின்றது.

'குரு' என்ற பெயர் பல்வேறு பணிகளை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. வழிகாட்டி, முன்னோடி, நிபுணர், அறிவுப் பொக்கிசம், நல்வழிப்படுத்துபவர், எதிர்வு கூறும் ஒரு ஞானி, மதியுரைஞர் எனப்பல்வேறு கணிப்பில் குருத்துவம் மதிக்கப்பட்டது.

மாணவர்கள் வெற்றுப் பாத்திரங்கள் எனவும் அதனைத் தமது அறிவால் நிரப்புபவர்கள் ஆசிரியர்கள் என்றும் ஓர் எண்ணக்கரு சமூகத்தின் மத்தியில் இருந்தது. ஆசிரியர் எதனைக் கூறுகின்றாரே அதனை வேதவாக்காகக் கொண்ட காலம் அன்று இருந்தது. ஆனால் இன்று கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு மாற்றமடைந்து காணப்படுகின்றது. மாணவர்கள் தங்களின் அனுபவங்களின் மூலம் புதிய புதிய அர்த்தங்களைக் கட்டியெழுப்புகின்றார்கள். அவ்வாறான மாணவர் சமுதாயத்தை தட்டிக் கொடுத்து சிறந்த கற்றல் வாய்ப்புகளைச் சூழலில் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே ஆசிரியரது வகிபங்காகும் என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.

எனவே ஒரு நல்ல ஆசிரியரின் பங்கு அறிவை மாணவர்களுக்கு அள்ளிக் கொடுப்பது மட்டுமன்றி, அவர்களை தாமாகச் சிந்திப்பதற்கும், தமக்கான தீர்மானங்களைத் தாமாகவே மேற்கொள்வதற்கும், தாமாக செயற்பட்டுக் கற்பதற்கும் தூண்டுபவராக ஆசிரியரின் பங்கு விரிவடைகின்றது. இத்தகைய மாறுபட்ட சிக்கலான கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், அதற்கேற்ப தமது ஆசிரிய வாண்மையை விருத்தி செய்ய வேண்டியவராக எதிர்பார்க்கப்படுகின்றார்.

இன்றைய புதிய யுகத்தில் உலகமயமாதல் பொருளாதார விருத்தி எண்ணங்களையும், உழைப்பின் இலக்குகளையும், சந்தைப்படுத்தலின் எல்லைகளையும் மாற்றியமைக்க வேண்டியேற்படுகின்றது. அவ்வாறான மாற்றங்களுக்கேற்ப கல்வியின் முறைமையில் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வித் தொழில்நுட்பம், மதிப்பீட்டு முறைகள், தகைமைக்கான அங்கீகாரம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களின் வகிபங்கும் மாறி அவர்களின் அந்தஸ்தும் மாறுபடுகின்றது. ஆசிரியர்கள் தமது வாண்மையை விருத்தி செய்ய வேண்டிய தேவை வலுப்பெறுகின்றது. மொழியறிவு, விடய உள்ளடக்கம், கற்பித்தல் தொழில்நுட்பம், சமூகத்திறன்கள் மற்றும் மேலதிகமாக புத்துணர்ச்சி, பன்முக நோக்கம், தொடர்கல்வி ஊக்கம், பன்மொழித் தேர்ச்சி, தகவல்தொழிநுட்பத் தகைமை, எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்கு கொண்டவர்களே ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்ற எண்ணக்கரு நவீன கல்விச் செயற்பாட்டில் வலுப்பெற்று வருகின்றது.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் நவீன கல்வி முறையானது உயர்ந்த நூல் அறிவும், புலமையும் மட்டுமன்றி, ஆசிரியர் பணிக்கான விசேட பயிற்சியும் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.

'பிறப்பால் ஆசிரியர்' என்ற முன்னைய சிந்தனை இன்று வழுவிழந்து ஆசிரியர் என்பவர் உருவாக்கப்படவேண்டியவர், பயிற்றப்படவேண்டியவர் என்ற கருத்தானது நவீன கல்வி முறையில் இடம்பிடித்துள்ளது. இன்று கல்வியானது பாண்டித்திய அறிவினை மாணவர்களுக்குத் திணிக்கும் ஆசிரிய மையக்கல்வியாகவன்றி மாணவரின் ஆற்றலுக்கும், திறமைக்கும், ஆய்வுகளுக்கும், வழிசமைக்கும் மாணவரின் விருப்புக்களைக் மையமாகக் கொண்ட 'பிள்ளை மையக் கல்வியாக' அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

எனவே ஆசிரியர்கள் தமது மாறி வரும் வகிபாகத்தைச் செம்மையாகச் செய்ய வேண்டுமாயின் ஆசிரிய வாண்மையை விருத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் எல்லா ஆசிரியர்களும் பட்டப்படிப்பின் டிப்ளோமா பட்டதாரிகளாவும் அல்லது பயிற்றப்பட்ட பட்டதாரிகளாகவும் மாறுதல் வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைவாகவே தேசிய கல்வி நிறுவகமும், திறந்த பல்கலைக்கழகமும், ஏனைய பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பின் டிப்ளோமா பயிற்சியையும் கல்விமாணி பட்டப்படிப்பையும் ஆசிரிய சமூகத்திற்கு வழங்கி வருகின்றன. ஆசிரியர்கள் கற்கைநெறிகள், பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

செல்லையா பேரின்பராசா
(துறைநீலாவணை நிருபர்)


Add new comment

Or log in with...