நல்ல விடயங்களை செய்து நல்லவர்களாக திகழ்வோம்!

நல்ல விடயங்களை செய்து நல்லவர்களாக திகழ்வோம்!-Good Person & Good Quality in Islam

(ஹஜ் கடமையின் கிரியைகளில் ஒன்றாக அரபா மைதானத்தில் ஒன்றுகூடியிருந்த ஹஜ்ஜாஜிகள் மத்தியில் ஷெய்க் கலாநிதி பந்தர் பின் அப்துல் அஸீஸ் பலீலா ஆற்றிய பேருரை)

மாபெரும் செல்வந்தனும் கொடை வள்ளலும் சர்வ வல்லமை படைத்தவனுமான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரியது.

அனைவருக்கும் நலன்கள் புரிபவனும் மகத்தான சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருப்பவனும், நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுபவனுமான அல்லாஹ்வுக்கு அவனது தொடரான அருள்களுக்காகவும் அவனது நிஃமத்களுக்காகவும் நாம் அவனைப்; புகழ்கிறோம்.

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லையென்றும், அவன் ஒருவன், அவனுக்கு இணையாக யாரும் இல்லையென்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார் என்றும் சான்று பகர்கிறேன். அவரின் மீதும் அவரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

முஃமின்களே! அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவதன் ஊடாக அவனுக்கு அஞ்சி நடவுங்கள். அப்போது மகத்தான வெற்றியை நீங்கள் அடையலாம். உங்களது மறுமை, உலக விடயங்களில் வெற்றி பெறலாம.; இதனையே அல்லாஹ், ‘(முத்தகீன்கள்) இறையச்சமுள்ளவர்களுக்கு சார்பாகவே விளைவுகள் அமையும்’ என்கிறான்.

‘நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்கள், மற்றும் முஹ்ஸின்களோடு (சிறந்தவர்கள், நல்லவர்கள்) உடனிருக்கிறான்’

‘யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி பொறுமையுடன் நடந்து கொள்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களின் (முஹ்ஸின்) கூலியை வீணடிப்பதில்லை’

இஹ்ஸான் - நல்லது செய்தல், நன்றாக செயல்படல், அல்லாஹ் பார்க்கிறான் என்ற உணர்வுடன் செயல்படல் - போன்ற விடயங்களை அல்லாஹ் ஏவியுள்ளான். நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பது, நல்ல முறையில் நடந்துகொள்வது, உறவினர்களுக்கு கொடுப்பது போன்ற விடயங்களையும் உங்களுக்கு ஏவியுள்ளான்’.

எனவே அடியான் நல்லமுறையில் அழகிய முறையில் அல்லாஹ்வை வணங்க வேண்டும். இதனையே நபியவர்கள் ‘இஹ்ஸான் (நல்ல முறையில் நடப்பது) என்பது நீங்கள் அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பது போன்று அவனை வணங்குவதாகும். அவனை நீங்கள் பார்க்காவிட்டாலும் அவன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்’ (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) என்றார்கள்.

ஏகத்துவ நம்பிக்கையில் இஹ்ஸானாக நடந்துகொள்ள வேண்டும். வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்வதில் நல்ல முறையில் செயற்பட வேண்டும். ‘யார் தனது முகத்தை இஹ்ஸானான நிலையில் அல்லாஹ்வின்பால் திருப்புகின்றானோ அவன் பலமான கயிற்றை பற்றிக் கொண்டான்.’

‘யார் தனது முகத்தை இஹ்ஸானான நிலையில் அல்லாஹ்வின் பால் திருப்புகின்றானோ அவனுக்கு அவனது ரப்பிடம் கூலி இருக்கிறது. அவன் அஞ்சவோ கவலைப்படவோ தேவையில்லை’ என்கிறான். அவன் அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவான், அவனிடம் மாத்திரமே உதவி தேடுவான். அவனையே வணங்குமாறு அவன் கட்டளையிட்டுள்ளான். ஐவேளை தொழுகையைப் பேணிக்கொள்வதும் இஹ்ஸான் என்ற விடயத்துடன் தொடர்பானது.

‘நீங்கள் தொழுகைகளை பேணிக்கொள்ளுங்கள்.. ஸகாத், நோன்பு. ஹஜ் போன்ற இபாதத்களிலும் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும். மலக்குகள், மறுமைநாள், நபிமார்கள், வேதங்கள், கத்ர் போன்ற நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை நம்புவதும் இஹ்ஸான் ஆகும்.

அல்லாஹ் மனிதனுடன் நல்லமுறையில் நடந்து கொள்கின்ற நிலையில் மனிதன் எப்படி அவனுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளாதிருக்க முடியும். அல்லாஹ் அருள்களை பிரவாகிக்க செய்திருக்கிறான். இவை அவன் செய்த இஹ்ஸான்கள். வானங்கள் பூமியில் உள்ளவற்றையும் அவன் உங்களுக்கு வசப்படுத்தி கட்டுப்படுத்தி தரவில்லையா? வெளிப்படையான உள்ரங்கமான அருள்களை அவன் பிரவாகிக்க செய்யவில்லையா?

‘அவன்தான் மனிதனை அழகான உருவில் படைத்தான். வேதங்களை இறக்கி அவற்றை விளக்கி வைக்க நபிமார்களை அனுப்பியது அல்லாஹ் மனிதர்;களுக்கு செய்த ஒரு இஹ்ஸான். குர்ஆனை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியதும் இஹ்ஸான் தான். அல்லாஹ் அழகிய வார்த்தைகளை வேதமாக இறக்கியுள்ளான் அது உள்ளத்தை சிலிர்க்க வைக்கிறது.

மனிதன் ஏனைய படைப்புகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளான். அல்லாஹ் உங்களுடன் அழகாக நல்ல முறையில் இஹ்ஸானாக நடந்து கொள்வது போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகில் அட்டூழியம் செய்ய வேண்டாம். அல்லாஹ் குழப்பம் செய்வதை விரும்புவதில்லை.

மனிதன் அவனுடன் தொடர்புபடும் அனைத்துடனும், அனைவருடனும் நல்ல முறையில் அழகாக நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள், உறவினர்கள், யதீம்கள் (அநாதைகள்), மிஸ்கீன்கள் (ஏழைகள்), அயலவர்கள், பயணிகள், பாதையே கதியானவர்கள் வீதியோரப் பிள்ளைகள் போன்றவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் பெருமையடிப்பவர்களை விரும்புவதில்லை.

பிள்ளை வளர்ப்பது கூட இஹ்ஸான் தான். சமூக விடயங்களில் ஈடுபட்டு அவர்களை பலப்படுத்த எடுக்கும் முனைப்பும் முயற்சிகளும் இஹ்ஸானே. கணவன், மனைவி, தலாக் சொல்லப்பட்டவளுடன் நல்லமுறையில் அழகாக நடப்பது, மனைவி கணவனுடன் நல்ல முறையில் நடப்பது போன்றவைகளும் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டிய விடயங்களேயாகும்.

நீங்கள் நல்ல முறையில் அல்லாஹ்வுக்கு பயந்து நடவுங்கள். நீங்கள் செய்வதை அவன் நன்கறியக்கூடியவனாகவே இருக்கின்றான். பலவீனர்கள், அநாதைகளுடனும் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். யதீம்களுடைய (அநாதை) சொத்து விடயத்தில் நல்ல முறையிலன்றி வேறுவிதமாக நெருங்க வேண்டாம்.

பணியாளர்களுடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதும் இறை கட்டளையாகும். அவர்களுடனான தொழில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். நாட்டு நலன்கள், மக்கள் நலன்கள், நாட்டின் ஸ்திரதன்மை என்பவற்றுக்காக உழைப்பது, தமது கடமைகளையும் பணிகளையும் பொறுப்புடன் நிறைவேற்றுதல், ஒழுங்குகளை பேணிக்கொள்ளுதல், மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல், பாவமற்ற விடயங்களில் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுதல், குழப்பம் விளைவிக்காதிருத்தல், அடுத்தவர்களை நோவினை செய்யாதிருத்தல், பயங்கரவாதத்துக்கு அணுஷரனை வழங்காதிருத்தல் போன்ற விடயங்களிலும் நல்ல முறையில் சிறப்பாக நடந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.மிருகங்களுடன் கூட நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்

‘நீங்கள் ஒரு வேலையை செய்தால் அழகாக செய்யுங்கள் - மிருகங்களை அறுப்பதாக இருந்தால் கூட நல்ல முறையில் அறுத்து விடுங்கள். கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். (ஹதீஸ்)

ஒரு முஸ்லிம் சூழலுடனும் நல்லமுறையில் அழகாக நடந்து கொள்வான். விவசாயத்தையும் பரம்பரைகளையும் அழிப்பதை அல்லாஹ் கண்டிக்கிறான். இத்தகைய அழிவுதரும் வேலைகளை அவன் விரும்புவதில்லை. முஸ்லிமல்லாதவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும். மிஸ்கீன்கள், அநாதைகள், கைதிகளுக்கு உணவு வழங்குவார்கள். எதிரியுடன் கூட நல்ல முறையில் நடக்க வேண்டும். தீயவற்றை நல்லவற்றால் தடுத்து விடுங்கள். கொடுக்கல் வாங்கல்;களிலும் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் ‘நீங்கள் அளந்தால் நீதியாக நடந்து கொள்ளுங்கள்.

இதுவே மிக சிறந்தது’. அனைத்து படைப்புகளுடனும் அழகாக பேச வேண்டும். மனிதர்களுக்கு நல்லதையே சொல்லுங்கள். அழைப்பு பணியில் (தஃவா) நல்லமுறையில் நடப்பதும் இஹ்ஸான் ஆகும். இறைவனின் பாதையின் பால் அறிவுபூர்வமாக அழகிய உபதேசம் கொண்டு அழையுங்கள். எது அழகிய முறையோ அம்முறையில் தர்க்கம் புரியுங்கள். அழகிய வார்த்தைகள், வாழ்த்துரைகள் முகமன்கள் கூறுவதும் நல்ல செயல்களாகும்.

‘நீங்கள் வாழ்த்தப்பட்டால் அதனை விட சிறப்பாக பதில் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்’. மனிதர்களின் தீங்குகளை பொறுத்துக்கொள்வது கூட இஹ்ஸான் என்ற விடயத்தில் வருகின்றது. பொறுமையை கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் சிறப்பாக செயல்படுகின்றவனின் - முஹ்ஸின் - கூலியை வீணடிப்பதில்லை. முஃமினது பேச்சும் செயலும் நல்லதாக சிறப்பானதாக காணப்படும்.

‘சொல்லப்படும் விடயத்தை செவிமடுத்து சிறப்பாக செயல்படுகின்ற அடியானுக்கு நன்மாராயணம் கூறுங்கள். இவர்கள்தான் அல்லாஹ்வால் நேர்வழிகாட்டப்பட்டவர்களாவர். இவர்களே அறிவுள்ளவர்கள். போட்டி போட வேண்டிய போட்டிக்குரிய இடம் இஹ்ஸான் (அழகாக செயல்படுதல்) என்பதை முஃமின் அறிந்து வைத்திருப்பான்

‘அவன் வாழ்வையும் மரணத்தையும் படைத்தது உங்களில் யார் சிறப்பாக செயல்படுகின்றீர்கள் என்பதை சோதிப்பதற்காகத்தான்’. முஃமின் அல்லாஹ்வுடனான உறவை சிறப்பாக பேணுவான். மனிதர்களுடனான உறவையும், படைப்புகளுடனான உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்வான். இதன் மூலம் தனக்குத்தானே நன்மை செய்துகொள்கிறான். இதனூடாக அல்லாஹ்வின் நேசத்தையும் அவன் உடனிருப்பதையும் அடைகின்றான். அவனை நெருங்குகிறான்.

நீங்கள் ஒரு நல்ல விடயத்தை செய்தால் உங்களுக்கு நீங்களே நல்லதை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் நல்லதை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லது செய்பவர்களை விரும்புகிறான். அவர்களோடு நிச்சயமாக அவன் இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய அருள் நல்லது செய்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் நல்லது செய்பவர்களின் கூலியை வீணாக்கி விடுவதில்லை. இந்த உலகத்திலே நல்லது செய்கின்றவர்களுக்கு மறுமையில் நலன்கள் காணப்படும். நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் தோட்டங்களிலும் நீர்ச்சுனைகளுடனும் இருப்பார்கள்.


Add new comment

Or log in with...