டெல்டா பரவல்: பாதியளவான ஆஸி. மக்கள் மீண்டும் பொது முடக்கத்தில்

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் டெல்டா திரிபு வேகமாக பரவும் நிலையில் அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் பாதி அளவான 13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

அங்கு புதிதாக மூன்றாவது மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி 1.7 மில்லியன் மக்கள் வசிக்கு தெற்கு அவுஸ்ரேலியாவிலும் நேற்று பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டது. ஏற்கனவே விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸின் பகுதிகள் கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுத்துள்ளன.

ஐந்து தொற்றுச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து தெற்கு அவுஸ்திரேலிய குடிமக்கள் ஏழு நாட்கள் வீடுகளில் தங்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த முடக்கநிலை நடவடிக்கை அவுஸ்திரேலியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின இரு மிகப்பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் எப்போது திறக்கப்படும் என்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முடக்கநிலை அமுலுல் இருக்கும் பகுதிகளில் அந்த விதிகளை பாதுகாக்க அதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலம் வரை கொரோனா தொற்றுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் பாராட்டை பெற்றிருந்ததோடு அந்நாட்டில் 1000க்கும் குறைவான கொரோனா தொற்று உயிரிழப்புகளே பதிவாகி உள்ளன.

ஆனால் வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் தடுப்பு மருந்து வழங்குவதில் உள்ள பின்னடைவும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த மாத பிற்பகுதியில் சிட்னியில் முடக்க நிலை அமுலுக்கு வந்த நிலையிலும் அங்கு கடந்த புதன்கிழமை 110 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதன்மூலம் அந்நாட்டில் புதிதாக ஏற்பட்ட நோய்த்தொற்று சம்பங்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டியுள்ளது.

இதில்  நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 110 பேருக்குக் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 43 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிகரித்துவரும் நோய்ப்பரவல் சம்பவங்கள் குறித்து அனைவரும் பொறுமை காக்கும்படி அம்மாநில முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வைரஸ் தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள 84,000 பேர் முன்வந்ததைத் தொடர்ந்து அதிகமானோருக்கு நோய் உறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.

மளிகைக் கடைகள், உடற்பயிற்சி மற்றும் வேறு அத்தியாவசி காரணங்கள் தவிர்த்து குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தளங்கள் மற்றும் சிறப்பு சில்லறைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சிட்னியின் முடக்க நிலை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கலாம் என்று அங்சப்படுகிறது. அதிகம் பேருக்கு தடுப்பு மருந்து வழங்கும் வரை உள்நாட்டு தொற்றுச் சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கு அவுஸ்திரேலிய நிர்வாகம் முயல்கிறது. அவுஸ்ரேலியாவில் 14 வீதத்திற்கு குறைவானவர்களுக்கே தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...