வைரஸில் மரபணு மாற்றம் நடப்பது புதுமையானதல்ல!

டெல்டா தொற்று ஏற்பட்டாலும், தடுப்பூசி ஏற்றியவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது

 - தமிழ்நாடு மருத்துவ நிபுணர் கூறும் ஆறுதல்

வைரசில் மரபணு மாற்றம் நடப்பது புதிய விஷயம் இல்லை. அதன் மரபணுவில் தொடர்ந்து மாற்றம் ஏற்படவே செய்யும். இன்புளுவென்சா வைரசிலும் மாற்றம் நிகழ்ந்தபடிதான் இருந்தது. தன் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பு.

இவ்வாறு கூறுகின்றார் தமிழ்நாடு, சென்னையில் உள்ள தொற்றுநோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர் டொக்டர் சுப்பிரமணியம் சுவாமிநாதன்.

‘கொரோனா வைரசில் நடைபெறும் மரபணு மாற்றம் மட்டும் ஏன் பதற்றத்தை தருகிறது என்றால், இது ஆர்.என்.ஏ. வைரஸ். இவ்வகை வைரசில் உருமாற்றம் நடப்பது அதிகமாகவும், வீரியமாகவும் இருக்கும்.

டெல்டா பிளஸ் என்ற ஒரே வைரசில் இரு உரு மாற்றமும் நிகழ்ந்து உள்ளதால், அடுத்த அலையில் அதிக பாதிப்பை எற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அலை நிச்சயம் வரும் என்றாலும், பரவல் இருக்குமா? வீரியம் அளவு எவ்வளவு? இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டால் பாதுகாப்பு கிடைக்குமா? இவை பற்றி ஆராய்ச்சி செய்ய முடியவில்லை’ என்கிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர் டொக்டர் சுப்பிரமணியம் சுவாமிநாதன்.

‘எல்லா மரபணு மாற்ற வைரசிலும், தடுப்பு மருந்துகள் ஒரே மாதிரியாக செயல்படும் என்று சொல்ல முடியாது. சிலவற்றில் வீரியமாகவும், வேறு சில மரபணு மாற்ற வைரசில் மிதமாகவும் தடுப்பு மருந்து செயல்படலாம். தென்னாபிரிக்க மரபணு மாற்ற வைரசில், எந்தத் தடுப்பு மருந்தும் வீரியமாக இதுவரை செயல்படவில்லை. கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தை விட, பாதிப்பால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் தான் அதிகம் உள்ளது’ என்கிறார் டொக்டர் சுப்பிரமணியம் சுவாமிநாதன்.

‘கொரோனாவில் இருந்து 70 சதவீதம் பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்துகள், உயிருக்கு 90 சதவீதம் பாதுகாப்பு தருகின்றன. எல்லா மரபணு மாற்ற வைரசைப் போலவும் டெல்டா பிளஸ் பாதித்தாலும், தடுப்பூசி போட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்’ என்கிறார் அவர்.


Add new comment

Or log in with...