கொவிட் ஒழிப்புக்காக தமதுயிரை பணயம் வைத்து பணியாற்றும் அரச ஊழியர்கள்

இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மருத்துவத் துறையின் வலிமையை சவாலுக்கு உட்படுத்தும் நுண்ணங்கியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் விளங்குகின்றது. இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் முழுவதிலும் அரச ஊழியர்கள் ஏராளமானோர் செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் அரச ஊழியர்கள் கொரோனா ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொவிட் 19 இற்கு எதிரான அவர்களது நேர்மையான செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து அவர்களை கெளரவப்படுத்த நாட்டு மக்களாகிய எமக்கு இது ஒரு சிறந்த தருணமாகும்.

‘ இன்டர்கிரிட்டி ஐக்கன் 2020’ ஊடாக பெறப்பட்ட அனுபவத்திலிருந்து, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) கொவிட் பரவலை தடுக்க முன்னின்று தனது சேவையினை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றது. இவ்வாறு பணியாற்றும் அர்ப்பணிப்பான அரச ஊழியர்களின் பெயர்கள் ‘இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021’ இற்கு பரிந்துரைக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 முன்னைய ஆண்டுகளை விட பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. உலகளாவிய கொவிட் தொற்றால் நாம் இப்பொழுது வாழும் மாறுபட்ட சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாண்டு கொவிட் தொற்றுக்கு எதிராக பணியாற்றும் அரச ஊழியர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

‘கொவிட் தொற்றைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ், தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த தமது கடமைகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அரச ஊழியர்களை கௌரவிக்க இம்முறை இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 நேர்மைக்கு மகுடம் செயற்பாடானது 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ‘நேர்மைக்கு கௌரவம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் நேபாளம், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இவ்வாண்டு ‘இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021’ பிரசாரம் நடைபெறுகிறது. இன்டர்கிரிட்டி ஐக்கன் பிரசாரமானது வெளி மற்றும் உள்ளக அழுத்தங்களுக்கு அப்பால் ஊழலுக்கு எதிராக மற்றும் நேர்மையாக தமது பணிகளை நிறைவேற்றும் அரச ஊழியர்களை கெளரவித்து அங்கீகரிக்கும் செயற்பாடாகும்.

இன்டர்கிரிட்டி ஐக்கன் விருதானது பொதுமக்களின் பங்குபற்றலுடன் வழங்கப்படும். அதாவது யார் இவ்விருதுக்கு பொருத்தமானவர் என்பதை பொதுமக்களின் பரிந்துரைகள் மூலம் தெரிவு செய்யும் ஓர் தனித்துவமான செயற்பாடாகும். இன்டர்கிரிட்டி ஐக்கன் ஸ்ரீலங்கா 2021 இற்கான பரிந்துரைகளை பொதுமக்கள் 2021 செப்டம்பர் 06ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.

இன்டர்கிரிட்டி ஐக்கன் கையேடு மற்றும் பரிந்துரைக்கான விண்ணப்பப்படிவங்களை www.integrityicon.lk எனும் இணையத்தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பின்வரும் தொடர்பு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் 0711 295 295/ 0763223442/ [email protected]

சனச இன்டர்நெஷனல் பிரைவேட் லிமிடெட் நிர்வாகப் பணிப்பாளர் சாமதானி கிரிவந்தெனிய, முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளூராட்சித் திணைக்களம் (மேல்மாகாணம்) தர்மசிறி நாணயக்கார, இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் நிர்வாக பணிப்பாளர் டில்ருக்ஷி ஹந்துன்நெத்தி, கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் தில்லைநடராஜா மற்றும் முன்னாள் துணை பணிப்பாளரும் (மருத்துவசேவை) இலங்கை தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளருமான டொக்டர் எஸ்.டெரென்ஸ் ஜி.ஆர்.டி சில்வா ஆகியோர் இவ்வாண்டின் நடுவர்களாக தலைமை தங்குகின்றனர்.

பரிந்துரைகள் முடிவடைந்த பின்னர் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் நடுவர் குழாம் ஊடாக பரிசீலனை செய்யப்பட்டு நேர்காணல்கள் இடம்பெறும். சிறந்த ஐந்து நபர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இப்பிரசாரம் 2021 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடையும். முன்னைய ஆண்டுகளில் பொதுமக்களிடமிருந்தும் பங்கேற்பாளர்களிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற பின்னூட்டல்களின் அடிப்படையில் இம்முறை முதல் ஐந்து இறுதி போட்டியாளர்களிடமிருந்து வெற்றியாளரை தெரிவு செய்ய மக்கள் வாக்குகள் பயன்படுத்தப்பட மாட்டாது. தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர் தமது மேலதிகாரியிடம் கட்டாய அனுமதியினை பெற வேண்டும் என்ற செயல்முறையையும் TISL மாற்றியமைத்துள்ளது.

‘இன்டர்கிரிட்டி ஐக்கன் ஸ்ரீலங்கா 2021’ இற்கு அரச பதவியில்/சேவையில் ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தையும் மற்றும் ஓய்வு பெற இன்னும் ஐந்து வருட கால இடைவெளியும் கொண்ட கொவிட் தொற்றை தடுப்பதற்காக பணியாற்றும் அரச ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது அவர்களை பரிந்துரைக்கலாம்.

இந்த தொற்று நோய் பரவல் காலப் பகுதியில் தேசத்திற்கு சேவை செய்யும் நோக்கில் நம் உயிரை காப்பாற்றுவதற்காக தமது உயிரை பணயம் வைத்து கொவிட் தொற்றைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்களை இன்டர்கிரிட்டி ஐக்கன் 2021 இற்கு பரிந்துரைக்க TISL பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

- றிசாத் ஏ. காதர்,
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)


Add new comment

Or log in with...