பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் திருத்தம் செய்யலாம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கையில் பரிந்துரை

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு இணங்கவில்லை என அந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை ஆராய்ந்து, நாட்டிலுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் 09, 11 மற்றும் 13 ஆவது சரத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சிறந்த ஜனநாயக ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக 03 பரிந்துரைகளையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 09 ஆவது சரத்தில் காணப்படும் தடுப்புக் காவல் உத்தரவை அமுல்படுத்தும் போது, குறைந்தபட்டசம் மூன்று மாதம் அல்லது அதற்கு மேல் தடுத்துவைக்கப்படும் நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து, வழக்கை நிறைவுசெய்ய வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

11 ஆவது சரத்தில் காணப்படும் வகையில் தடுப்புக் காவலில் சிறையில் வைக்கப்படும் நபரை, சிறைக்குப் பதிலாக விசேட பாதுகாப்பின் கீழ் சந்தேகநபரின் வீட்டில் அல்லது கிராமத்திலுள்ள ஒரு பகுதியில் தடுத்துவைப்பதற்குரிய இயலுமை தொடர்பிலும் ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

13 ஆவது சரத்தில் காணப்படுகின்ற வகையில், ஜனாதிபதிக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு குறைந்தபட்சம் மூவர் அடங்கிய அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசனை குழுவை நியமிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21 மற்றும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியூடான புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யுமாறு புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

 


Add new comment

Or log in with...