மாகாண அதிகாரத்தை கையகப்படுத்துவதா?

மத்திய அரசு மீது விரைவில் வழக்கு

மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தற்போதுள்ள அரசாங்கம் மாகாணங்களுக்கு உரித்தான கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களுக்கான மாகாண அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகின்றார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்குட்பட்ட கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் கல்வியலாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதன்படி மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசு தனது ஆளுகைக்குட்படுத்தப்படுவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...