தலாய்லாமாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிப்பது எவ்வாறு?

உலகின் கரை என அழைக்கப்படும் திபெத்தை சீனா கைப்பற்றிய பின்னர், தலாய்லாமா தனது ஆதரவாளர்களுடன் பனிமலைகளைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சமடைந்ததை பலரும் அறிவார்கள்.

தலாய்லாமாவை திபெத்தியர் புத்தரின் அவதாரமாகவே கருதுகிறார்கள். ஒரு தலாய்லாமா மறைந்ததும், அவர் இன்னொரு திபெத்திய குழந்தையாக உருவெடுத்து அடுத்த தலாய்லாமாவாகிறார் என்பது திபெத்திய பௌத்தர்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

சீனா திபெத்தைக் கைப்பற்றி அதை ஒரு சுயாட்சிப் பிரதேசமாக வைத்திருந்தாலும் அம்மக்களின் பாரம்பரிய நம்பிக்ைககள், மதம், கலாசாரம் என்பனவற்றின் மீது சீனாவினால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஏனெனில் திபெத்தியரின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா மட்டுமே. அவர் இருப்பது இந்தியாவின் தர்மசாலாவில். தலாய்மாலாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே அவர் மூலமாக திபெத்தியர்களின் உள்ளங்களை வெல்ல முடியும்.

இந்தியாவில் வசிக்கும் தலாய்லாமாவை திபெத் திரும்புமாறு சீனா பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், தலாய்லாமா அதற்கு உடன்படவில்லை. சீனா தன்னை அழைப்பது மகுடம் சூட்டவல்ல என்பது அவருக்குத் தெரியும். அவர் மூலமாக திபெத்திய ஆன்மிகத்தைக் கைப்பற்ற சீனா விரும்புகிறது.

திபெத்தில் அவர் காலமானால் அடுத்த தலாய்லாமாவைத் தேடும் ஆன்மிகப் பணி சீன அரசின் பின்னணியுடனேயே நிகழும். அதாவது, அடுத்த தலாய்லாமா சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளாகவே இருப்பார். இன்றைய சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங், தலாய்லாமாவை அழைத்து வருவது சாத்தியப்படாது என்பதை நன்கறிவார். எனவே மாற்று நடவடிக்கைகளில் சீனா ஈடுபடும்.

இந்தப் பின்னணியில்தான் தலாய்லாமாவின் 86வது பிறந்த தினம் வந்தது. பிரதமர் நரேந்திர மோடி அவரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவேற்றினார். ஆரோக்கியமான நீன்ட கால வாழ்க்ைகக்காக அவரை அப்பதிவில் வாழ்த்தியுமிருந்தார். இந்த வாழ்த்தை அரசியல் பொருள் கொண்டதாக சீன அரசாங்கம் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இதற்குக் காரணம் உண்டு. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தில் திபெத் தொடர்பான ஒரு கொள்கையை உருவாக்கி இருந்தார். இப்போதைய தலாய்லாமாவின் மறைவின் பின்னர் அவரது புதிய அவதாரத்தை தேடுவது முற்றிலும் திபெத்தியர்களின் உள்விவகாரம் என்றும், அதை அவர்கள்தான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான திபெத்தின் அபிவிருத்திக்கும் அப்பால் திபெத் விவகாரங்களைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கும் புதிய கொள்கை வரைவொன்றை சீன ஆட்சியாளர்கள் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் இந்திய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகக் கூடிய திபெத்திய கொள்கையை அமெரிக்கா வெளியிட்டது. திபெத் விவகாரங்கள் பற்றி உலக நாடுகளோ அல்லது இந்தியாவோ பேசுவதை சீனா முற்றாகவே விரும்புவதில்லை.

2011 ஆம் ஆண்டு புதுடில்லியில் மதங்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில் உரையாற்றுவதற்கு தலாய்லாமா அழைக்கப்பட்டிருந்தார். சீனா, அம்மாநாட்டில் தலாய்லாமா கலந்து கொள்வதை கடுமையாக ஆட்சேபித்திருந்தது. ஆனால் அவர் உரையாற்றுவதை இந்திய அரசு தடுக்கவில்லை. தலாய்லாமாவுக்கு எந்த நாடும் முக்கியத்துவம் அளிப்பதை சீனா விரும்புவதில்லை. கொரோனா வைரஸ் எவ்வாறு வூஹான் மாகாணத்தில் தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக வெளிப்படையான ஒரு ஆய்வை நடத்த சீனா தயங்குவது மற்றும் தன் அண்டை நாடுகளுடனான பிணக்குகளில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும் தன்மைகளை முன்வைத்து சீனாவைத் தனிமைப்படுத்தும் ஒரு சூழலை உலக நாடுகள் உருவாக்கும் நிலையில், இந்தியப் பிரதமரின் ட்வீட்டை சீனா தீவிரமாகத்தானே எடுத்துக் கொள்ளும்!

மேலும், அமெரிக்க சுதந்திர தினம் ஜுலை 4ம் திகதி கொண்டாடப்பட்ட போது ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், பிறந்த தினத்தன்று தலாய்லாமாவுக்கும் வாழ்த்து தெரிவித்த மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் சீனா இரண்டு விஷயங்களைக் கையாள நினைக்கிறது. முதலாவது அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை. இரண்டாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுமைக்குள் திபெத்திய பௌத்தத்தைக் கொண்டு வருதல். இவ்விரண்டும் சீனா வசமானால் சுதந்திர திபெத்துக்கான இயக்கம் முடிவுக்கு வந்து விடும். இந்தியாவின் தலையீடும் நின்று விடும். மேலும் இலங்கை, நேபாளம் போன்ற சீன செல்வாக்கு காணப்படும் நாடுகளை திபெத்தில் இருக்கக் கூடிய சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தலாய்லாமா மற்றும் திபெத்திய பௌத்தத்தை சுட்டிக் காட்டி, திபெத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அந்நாடுகளை நம்ப வைக்கலாம் என்றும் சீனா கருதுகிறது.

இதன் மூலம் சீனா மீது இந்நாடுகளுக்கு இருக்கக் கூடிய கிலேசத்தை அகற்றி, அவற்றை தமது கடல் பட்டுப்பாதை திட்டத்துக்குள் முழுமையாக ஈடுபடுத்தலாம் எனவும் சீனா நம்புகிறது.

தெற்காசியாவுடன் திபெத்தை இணைக்கும் வகையில் ஒரு வழிப்பாதையை உருவாக்குவதில் சீனா பெருமளவு நிதியை முதலீடு செய்து வருகிறது. 2021_ - 2025 காலப் பகுதிக்கான 14வது ஐந்தாண்டு திட்டத்தில் இது ஒரு முக்கிய பகுதியாக காணப்படுகிறது. கடல் பட்டுப்பாதைத் திட்டத்தின் கீழ் நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைக்கு குறுக்காக ரயில் பாதை அமைக்கும் திட்டமும் திபெத்தையும் நேபாளத்தையும் இணைக்கும் பல்பரிமாண பெருந்திட்டத்துக்குள் அடங்கும். இத்தகைய திட்டங்களை செயல்படுத்த வேண்டுமானால் திபெத்தில் பெருமளவிலான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வகையில் திபெத்தின் லாசா மற்றும் ஸிகாஸே ஆகிய நகரங்களில் தீர்வையற்ற வர்த்தக வலயங்களை சீனா அமைத்திருப்பதோடு வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள், கைத்தொழில் பேட்டைகள் என்பன இப்பிராந்திய அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு நட்பமான விஷயம் உள்ளது. திபெத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் அபிவிருத்தியானது திபெத்தியர்களை திருப்தியடைச் செய்யும் என்றும் இந்தியாவில் இருந்தபடி சுதந்திர திபெத் இயக்கத்தை நடத்தி வரும் தலாய்லாமாவின் இலட்சியம் மங்கிப் போகும் என்றும் திபெத்தியர்கள் சுதந்திர திபெத் என்ற உணர்வை இழந்து விடுவர் என்றும் சீன அரசு எதிர்பார்க்கிறது.

சீன அரசு ஸின்ஜியாங்கில் நடந்து கொண்டபதைப் போல திபெத்தில் கடினமாக நடந்து கொண்டு திபெத்தை சீன மயப்படுத்த விரும்பாமைக்கும் காரணம் உண்டு. ஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம்களை நடத்துவதைப் போல் சீனா திபெத்தில் நடந்து கொள்ளவில்லை. திபெத்தியரின் கலாசார நம்பிக்கைகளிலோ மத விவகாரங்களிலோ சீன அரசு தலையிடுவதுமில்லை. ஏனெனில் வலுக்கட்டாயப்படுத்தாமல் அவர்கள் தானாகவே வழிக்கு வர வேண்டும் என சீனா எதிர்பார்க்கிறது. பௌத்த நாடுகளிலும் பௌத்தர் பெருமளவில் வாழும் நாடுகளிலும் நல்லுறவைப் பேணவும் திபெத்தியரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளவுமே இந்த 'நோகடிக்காத' அணுகுமுறையை சீனா கைக்கொண்டு வருகிறது.

கடந்த மே மாதம் சீனா ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. திபெத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வதற்கான அங்கீகாரமளிக்கப்பட்ட கட்டளைச் சட்டம் 1793 இல் பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அதில் தலாய்லாமா மற்றும் ஏனைய வாழும் புத்தர்மார் தொடர்பிலான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானிக்கப்படும் புதிய லாமா சீன மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன சட்டத்துக்கும் திபெத்தியர்கள் எவ்வளவு தூரம் விசுவாசமமாக உள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது சுபீட்சம் அமையும் என இவ்வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

'தேசிய பாதுகாப்பின்றி திபெத்தியர்களின் அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றி வைக்க முடியாதவை. உறுதியான சமூக பின்புலமின்றி பொருளாதார, சமூக அல்லது பசுமைச் சூழல் அபிவிருத்தியோ அல்லது மக்களின் உரிமையான உறுதியானதும் மகிழ்ச்சிகரமானதும் வாழ்க்கையையோ உறுதிப்படுத்த முடியாது' என்று இந்த அறிக்கை கூறுகிறது.

திபெத்தியர் சீன அரசுடன் இணங்க மறுத்தால் திபெத்திய பௌத்தம் சீயமயமாக்கலுக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இந்த வெள்ளை அறிக்ைக என்ன சொல்கிறது என்றால், சீனத்துவத்துக்குள் மதங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். சட்டங்களுக்கு அமைய மத விவகாரங்கள் கையாளப்பட வேண்டும்.


Add new comment

Or log in with...